சீன பூகம்பத் தாக்கம்: ஏரிகள் உடையும் அபாயம்!

சனி, 31 மே 2008 (16:25 IST)
சீனாவின் சிச்சுவான் பகுதியில் கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ஆற்றின் குறுக்கே சேறும் சகதியும், பாறைகளும், கற்களும் விழுந்து ஆற்றின் நீரோட்டத்தை அடைத்து திடீர் ஏரிகள் உருவாகியுள்ளன!

இதுபோன்று 35 ஏரிகள் அங்கு உருவாகியுள்ளன. ஆனால் நீர்வரத்து தொடர்ந்து இருப்பதாலும், பலத்த மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், ஏரியின் தண்ணீர் கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜியாங் ஜியாங் என்ற ஆற்றின் குறுக்கே தடை ஏற்பட்டு தாங்கியாஷன் ஏரி உருவானது. இதனால் ஏற்படும் வெள்ள அபாயத்திலிருந்து 1,50,000 பேர்களை சீனா அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றியுள்ளது.

இப்போது அந்த தடைகளை வெடிபொருட்கள் கொண்டு உடைக்க சீன ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரிய பெரிய கால்வாய்கள் வெட்டப்பட்டு ஏரிகளில் இருக்கும் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டு வருகின்றன.

பூகம்பத்தில் சிக்கியோர்களை மீட்கும் பணியே இன்னமும் சரியாக முடியாத தருணத்தில் சீன அரசிற்கு இந்த பூகம்ப ஏரிகளால் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தாங்கியாஷன் ஏரியில் 5,000 டன்கள் அபாய அமிலங்கள் தேங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்டால் இந்த அபாய அமிலங்கள் வெள்ள நீருடன் கலந்து பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஏரிகளின் வெள்ள அபாயத்தை குறைக்க மட்டுமே 1 பில்லியன் யுவான் (144.2 மில்லியன் டாலர்கள்) தொகையை சீன அரசு ஒதுக்கியுள்ளது.

மேலும் இந்தப் பகுதிகளில் சாலை வசதிகள் இல்லாததால் மீட்புக் குழுவினர் நடந்தே செல்லவேண்டியுள்ளது. ஹெலிகாப்டர்களையும் இயக்க முடியவில்லை என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

நிபுணர் கருத்து:

பிரிட்டனில் உள்ள துர்ஹாம் பல்கலைக் கழகத்தின் நில நடுக்க ஆய்வு நிபுணர் அல்கெஸாண்டர் டென்ஸ்மோர், "பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள இந்த ஏரிகள் உடையும் என்றால் அது திடீரென ஏற்படுவதாகவே இருக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்த ஏரிகள் மலைப்பகுதிகளில் பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தும், ஆனால் குறுகலான பள்ளத்தாக்குகளாக இருப்பதால் அதனை அடைக்க பெரிய அளவில் பொருட்கள் தேவைப்படாது. ஆனால் ஒரு உடைப்பு ஏற்பட்டால் கூட பள்ளத்தாக்குகளை நோக்கி தண்ணீர் அதிவேகமாக பெருக்கெடுக்கும். இது போன்று நீர் வருவது துவங்கிவிட்டால் அதன்பிறகு அதனை கட்டுப்படுத்தவியலாது. இது பேரழிவில் கொண்டு போய் விடும்.

சிச்சுவான் பகுதியின் வரைபடத்தை வைத்துப் பார்க்கும்போது மியாங்யாங் சமவெளிப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மியான்யாங் நகருக்குள் வெள்ள நீர் நுழையும் சாத்தியம் அதிகமிருக்கிறது." என்று கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்