லஷ்கர் இயக்கத்தின் 4 முக்கியத் தலைவர்களின் சொத்துக்கள் முடக்கம்!
புதன், 28 மே 2008 (16:54 IST)
கடந்த 2001 நாடாளுமன்றத் தாக்குதல் உள்பட இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள, பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்- இ தாய்பா இயக்கத்தின் 4 முக்கியத் தலைவர்கள் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்- இ தாய்பா இயக்கத்தின் தலைவர் முகமது சயீத், செயல் தலைவர் சகி- உர் ரஹ்மான், நிதித் தலைவர் ஹாஜி முகமது அஷ்ரஃப், இந்தியாவைச் சேர்ந்த லஷ்கர்- இ தாயிபா இயக்கத்திற்கு நிதி உதவி செய்பவரான மெக்மூத் முகமது அகமது பஹாசிக் ஆகிய 4 பேரின் சொத்துக்களும் முடக்கப்படுவதாக அமெரிக்க பொருளாதாரத் துறை அறிவித்துள்ளது.
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் உடனும், அவன் தலைமையிலான அல் காய்டா இயக்கத்துடனும் லஷ்கர் இயக்கத்திற்குத் தொடர்பு உள்ளதாகவும் அத்துறை கூறியுள்ளது.
"லஷ்கர்- இ தாய்பா ஒரு பயங்கரமான அல் காய்டா ஆதரவு இயக்கம்... இவ்வியக்கம் உலகம் முழுவதும் தனக்குத் தேவையான நிதியைத் திரட்டுவது அரசுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது" என்று அமெரிக்க பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரப் புலனாய்வுத் துறையின் துணை அமைச்சர் ஸ்டூவர்ட் லெவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த 2001 டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்றம் மீதான தாக்குதல், 2006 ஜூலை மாதம் மும்பை புறநகர் தொடர்வண்டிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் உள்பட இந்தியாவிற்கு எதிரான பல்வேறு பயங்கரத் தாக்குதல்களை கடந்த 1993 முதல் லஷ்கர் இயக்கம் மேற்கொண்டு வருகிறது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2005 டிசம்பரில் நடந்த பெங்களூர் தாக்குதல், 2005 அக்டோபரில் நடந்த புது டெல்லி தாக்குதல்கள் ஆகியவற்றிலும் லஷ்கர் இயக்கத்திற்குத் தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மார்கஷ்- உத் தாவா- வால்- இர்ஷாத் என்ற சன்னி சமூக சேவை அறக்கட்டளைதான் 1990 இன் முற்பகுதியில் ஆயுதம் தாங்கிய லஷ்கர்- இ தாய்பா இயக்கமாக மாறியது.
கடந்த 2002 ஜனவரியில் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இயக்கம், உலகளவில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது.
இத்தகைய லஷ்கர்- இ தாய்பா இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக 2001 டிசம்பர் 26 இல் அமெரிக்கா அறிவித்தது.