நேபாள நாடாளுமன்றம் முதல்முறையாகக் கூடியது!
செவ்வாய், 27 மே 2008 (18:24 IST)
நேபாளத்தில் 240 ஆண்டு கால மன்னராட்சியை முடிவிற்குக் கொண்டு வரும் வகையில், கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய தேசியச் சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவியேற்பு, உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நயபனேஷரில் உள்ள பைரேந்திரா சர்வதேச மாநாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பின் இடையில் நடந்தது.
நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூத்தவருமான குல் பகதூர் குருங் 570 க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உறுப்பினர்கள் அனைவரும் பண்பாட்டு உடையணிந்து வந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் நேபாளி மொழியிலும், மற்றவர்கள் தங்கள் தாய் மொழிகளிலும் பதவியேற்றுக் கொண்டனர்.
மொத்தம் 601 இடங்களைக் கொண்ட நேபாள தேசியச் சட்டப் பேரவையில் காலியாக உள்ள 21 இடங்களை அமைச்சர்கள் குழு நிரப்பும் என்றும், இன்றைய பதவியேற்பு விழாவிற்கு வராத உறுப்பினர்களுக்கு பின்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் என்றும் நாடாளுமன்றச் செயலர் தெரிவித்தார்.
நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் மாவோயிஸ்டுகள் 220 இடங்களிலும், நேபாளி காங்கிரஸ் 110 இடங்களிலும், சி.பி.என்.- யு.எம்.எல். கட்சி 103 இடங்களிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.