இந்தியாவுடன் வேற்றுமை பாராட்ட வேண்டாம்-பிளேர்!

திங்கள், 26 மே 2008 (14:44 IST)
பலம் வாய்ந்த நாடுகளாக உருவாகிவரு‌ம் இந்தியாவுடனும், சீனாவுடனும் வேற்றுமை பாராட்டுவதை மேற்கு நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் அமைப்பில் உரையாற்றிய டோனி பிளேர் "இந்தியாவும் சீனாவும், அடுத்த 20 ஆண்டுகளில் தொழிற்புரட்சியில் அமெரிக்காவைக்காட்டிலும் 4 மடங்கு பெரிதாகவும், 5 மடங்கு வேகமாகவும் வளரும். பல நூற்றாண்டுகளில் முதன் முறையாக அதிகாரம் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது என்பதை மேற்கு நாடுகள் கவனிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளுடன் அதிகாரப் போட்டியில் இறங்காமல் கூட்டுறவு மேற்கொள்ளும் சிந்தனை வளர வேண்டும் என்று கூறிய பிளேர் சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவுப் பற்றாக்குறை, உலகளாவிய பயங்கரவாதம் ஆகியவை தலைதூக்கியுள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உலகச்சமுதாய உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இனிவரும் காலங்கள் உலகமயமாதல், பண்பாடுகளுக்கு இடையேயான உரையாடல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. எனவே 20- ஆம் நூற்றாண்டு அதிகாரப் போருக்கு ஒரு போதும் திரும்பவியலாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உலக மக்க‌ள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகளை ஒன்றிணைந்து தீர்க்கப்பாடுபட வேண்டும் என்றார் டோனி பிளேர்.

வெப்துனியாவைப் படிக்கவும்