ஆஸ்ட்ரேலியாவிடமிருந்து யுரேனியம் – கமல்நாத் நம்பிக்கை!

சனி, 24 மே 2008 (14:29 IST)
ஆஸ்ட்ரேலியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இந்தியாவிற்கு யுரேனியம் விற்காது என்று கூறினாலும், அந்நாட்டிடமிருந்து நிச்சயம் யுரேனியம் பெற முடியும் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவில் தற்பொழுது சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மத்திய தொழில் - வர்த்தக அமைச்சர் கமல்நாத், மெல்போர்ன் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

“இந்தியாவிற்கு யுரேனியம் விற்பது குறித்த பிரச்சனையில் ஆஸ்ட்ரேலிய அரசு யதார்‌த்தமான, நடைமுறை சாத்தியமான அணுகுமுறையை கையாளவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை யுரேனியத்தை பெறுவதற்கு ஆஸ்ட்ரேலியா மட்டுமின்றி வேறு பல சாத்தியங்களும் உள்ளது. ஆனால், உலக வெப்பமயமாதல் பிரச்சனையை கருத்தில் கொண்டும், தூய்மையான எரி சக்தி ஆதாரத்தை உருவாக்குவதிலும் உள்ள அவசியத்தையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியாவுடன் ஆழமான உறவை உறுதி செய்து கொள்ளவும் இது அவசியம்” என்று கமல்நாத் கூறியுள்ளார்.

யுரேனியம் விற்பது குறித்து இதுவரை ஆஸ்ட்ரேலியாவிடம் இந்தியா பேசவில்லை என்றும், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு உறுதியானவுடன் அதுபற்றிய முயற்சி முன்னெடுக்கப்படும் என்றும் கூறிய கமல்நாத், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அரசியல் ரீதியான ஒத்த கருத்துடன் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்