ஐ.பி.ஐ. எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் சேர சீனா விருப்பம்!
வியாழன், 22 மே 2008 (18:05 IST)
இந்தியா- பாகிஸ்தான்- ஈரான் (ஐ.பி.ஐ) இயற்கை எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் சேர்வது குறித்து கவனமாகவும் முக்கியத்துவம் கொடுத்தும் பரிசீலித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பீஜிங்கில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய சீன அயலுறவு துணை அமைச்சர் ஹி யாஃபி, "இயற்கை எரிவாயுப் போக்குவரத்தை விரிவுபடுத்தும் சாத்தியக் கூறுகளை ஆராய்வது பற்றிய பரிந்துரைகளின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிந்துள்ளோம். அவற்றின் விவரங்கள் எங்களுக்குத் தெரியாது. அவை சாத்தியமா இல்லையா என்பது பற்றியும் எங்களுக்குத் தெரியாது. ஆனால், தற்போதுள்ள சில முக்கியப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பிறகு, எரிவாயுக் குழாய் பற்றி நாங்கள் ஆலோசிப்போம்" என்றார்.
சீனாவிற்கு அதிகமான எரிசக்தி உடனடியாகத் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், "எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் இணைந்துகொள்ள நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அது பல்வேறு விடயங்கள் சார்ந்தது. எனக்குத் தெரிந்து, தற்போது வெறும் பரிந்துரைதான் உள்ளது. ஆனால் அது நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரே குழாயின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து இந்தியாவும் சீனாவும் எரிவாயுவைப் பெற முடியுமா என்று கேட்டதற்கு, இதற்கான விடையை வல்லுநர்கள்தான் கூற முடியும் என்றார் அமைச்சர் ஹி யாஃபி.
எரிசக்தித் தேவைகள் குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் சீனா தீவிரமாக விவாதித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் எரிசக்தித் தேவையை நிறைவு செய்யும் விடயத்தில் கைகோர்க்க வேண்டும்; அது நடந்தால் வெற்றி நம் அருகில் வரும் என்றார்.