ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு: உலக நாடுகள் கண்டனம்!
புதன், 14 மே 2008 (18:59 IST)
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா!
அமெரிக்க அயலுறவுப் பேச்சாளர் சான் மெக்கார்மக் விடுத்துள்ள அறிக்கையில், "அப்பாவி மக்கள் படுகொலைகளுக்கு மன்னிப்பு இல்லை. பயங்கரவாதத்தை வேருடன் ஒழிப்பதற்காகப் போராடும் இந்திய அரசுடனும் மக்களுடனும் நாங்கள் என்றும் இணைந்து நிற்போம்" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல்!
"ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட, அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்குக் காரணமான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எந்தச் சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்" என்று இஸ்ரேல் தூதரகப் பேச்சாளர் கூறினார்.
பிரிட்டன்!
"பயங்கரவாதம் எத்தகைய அழிவைக் கொண்டுவரும் என்பதை ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் காட்டுகின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுடனும், அரசுடனும் பிரிட்டன் எப்போதும் இணைந்து நிற்கும்" என்று பிரிட்டன் அயலுறவு செயலர் டேவிட் மிலிபாண்ட் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கனடா!
கனடா அயலுறவு அமைச்சகத்திற்கான நாடாளுமன்றச் செயலர் தீபக் ஓப்ராய், அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் ஆர்.எல். நாராயணனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் கனடாவின் வலிமையான கூட்டாளியாக இந்தியா எப்போதும் உள்ளது" என்று கூறியுள்ளார்.
வங்கதேசம்!
"ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒரு அறிவுகெட்ட அவமானகரமான செயல்" என்று வங்கதேச இடைக்கால அரசின் அயலுறவு ஆலோசகர் இஃப்திகார் அகமது செளத்ரி கூறியுள்ளார்.
"பயங்கரவாதிகளுக்கு எல்லையில்லை. ஒழுக்கக் கேடான மட்டமான தேவைகளுக்காக அவர்கள் இச்சதியை மேற்கொண்டுள்ளனர்" என்றும் அவர் கண்டித்துள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த ஹியூஜி தீவிரவாதிகளுக்கு ஜெய்ப்பூர் தாக்குதல்களில் தொடர்பிருப்பதாக இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி பற்றிக் கேட்டதற்கு, "விசாரணை முழுமையாக முடியும் வரை பத்திரிகைகள் எந்தவொரு முடிவிற்கம் போகக் கூடாது" என்றார் செளத்ரி.
ஐக்கிய அரபுக் குடியரசு!
ஐக்கிய அரபுக் குடியரசின் அயலுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஷயெத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்ளும் அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு முழுமையான ஒத்துழைப்பை அளிப்போம் என்பதையும் உறுதியளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.