ஹின்ட்ராஃப் தலைவர்களை விடுதலை செய்ய மலேசிய உச்ச நீதிமன்றம் மறுப்பு!
புதன், 14 மே 2008 (15:49 IST)
இந்திய வம்சாவழியினருக்கு சமஉரிமை கோரிப் போராட்டம் நடத்தியதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் அமைப்பின் தலைவர்கள் 5 பேரை விடுவிக்க மலேசிய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்குச் சமஉரிமை கேட்டுக் கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்திற்காக ஹிந்து உரிமை பாதுகாப்புக் குழுவின் (ஹின்ட்ராஃப்) தலைவர்கள் எம்.மனோகரன், பி.உதயகுமார், வி.கணபதிராவ், ஆர்.கங்காதரன், டி.வசந்தகுமார் ஆகிய 5 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
பல மாதங்களாக விசாரணையின்றித் தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்று இவர்கள் 5 பேரும் கீழ் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.
ஹின்ட்ராஃப் தலைவர்களை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹின்ட்ராஃப் தலைவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மலேயா அலாவுதீன் முகமது ஷெரீஃப் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் பிரதமர் அப்துல் அகமது பதாவி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கூறியது.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இவ்வழக்கில் ஹின்ட்ராஃப் தலைவர்கள் சார்பில் வழக்கறிஞரும் எதிர்க்கட்சியான ஜனநாயகப் போராட்டக் குழுவின் தலைவருமான கர்ப்பால் சிங்கும், அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டீலும் ஆஜராயினர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டதும், நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த ஹின்ட்ராஃப் தலைவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். இத்தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யப் போவதாக வழக்கறிஞர் கர்ப்பால் சிங் தெரிவித்தார்.