அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: ஒபாமா முன்னிலை!
புதன், 7 மே 2008 (17:40 IST)
ஜனநாயக் கட்சியின் சார்பில் வடக்கு கரோலினாவில் நடந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றிபெற்றார்.
இதன்மூலம் அவர் தன்னுடன் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை விட 150 பிரதிநிதிகள் ஆதரவு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் முடிவதையடுத்து வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது.
இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மாகாணம் வாரியாக நடந்து வருகிறது. இதில் கருப்பினத்தவரான பாரக் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வடக்குக் கரோலினா, இண்டியானா ஆகிய மாகாணங்களில் நேற்றுத் தேர்தல் நடந்தது. இதன் வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வடக்குக் கரோலினா மாகாணத்தில் ஒபாமா வெற்றிபெற்றார். அவருக்கு 56 விழுக்காடு வாக்குகளும், ஹிலாரிக்கு 42 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன.
இண்டியானா மாகாணத்தில் ஹிலாரி வெற்றிபெற்றார். அவருக்கு 51 விழுக்காடு வாக்குகளும் ஒபாமாவிற்கு 41 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன.
இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி ஒபாமா 1,803 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். ஹிலாரி 1,653 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். ஒபாமா 150 பிரதிநிதிகள் ஆதரவு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இன்னும் 6 மாகாணங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. அதிகபட்சமாக 2,025 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறுபவர்கள் அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுவர்.