சரப்ஜித் மரணதண்டனை காலவரையின்றி ஒத்திவைப்பு!

சனி, 3 மே 2008 (10:25 IST)
பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய தூக்குத் தண்டனை கைதி சரப்ஜித்சிங்கின் மரண தண்டனை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திலிருந்து இதற்கான உத்தரவுகள் சரப்ஜித் அடைக்கப்பட்டுள்ள லாகூரில் உள்ள கோட் லக்பட் சிறைக்கு வந்து சேர்ந்தன. அதாவது அடுத்த உத்தரவுகள் வரும் வரை சரப்ஜித் தூக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பதவியேற்றுள்ள புதிய கூட்டணி அரசு மரண தண்டனையை முற்றிலும் நீக்க பரிசீலனை செய்து வருகிறது. அதாவது ஆயுள் தண்டனையாக குறைக்க தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

இதனால் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டலாம் என்று தெரிகிறது. அவ்வாறு குறைக்கும் பட்சத்தில் அவர் ஏற்கனவே ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் கழித்து விட்டதால் விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை குறித்து பாகிஸ்தான் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அன்சார் பர்னி இது குறித்து செய்தியாளர்களிடையே கூறுகையில் சரப் ஜித் சிங்கிற்கு தூக்கு தண்டனை அளித்தால் அது மனித நேயத்தை கொலை செய்வதாகும் என்றும் தக்க ஆதாரங்கள் இல்லாமல் அவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் மனித உரிமை அமைச்சரான பர்னி, சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய தூக்கு தண்டனை கைதி கஷ்மீர் சிங் விடுதலை செய்ய‌ப்ப‌ட்ட‌திலு‌ம் ப‌ர்‌னியின் பங்கு மிக முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்