உணவுப் பொருட்கள் விலையேற்றம் : ஐ.நா. கடும் எச்சரிக்கை!

வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (13:03 IST)
உலகெங்கிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை அதிவேகமாக அதிகரித்து வருவதால், கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளதாக் ஐ.நா. உணவுக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல முக்கிய ஏற்றுமதி நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் உலக அளவில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

ஜூன் 2007 முதல் பிப்ரவரி 2008-‌க்குள் உணவுப் பொருட்கள் விலை 55 விழுக்காடு அதிகரித்துள்ளது. உணவு‌ப் பொருட்கள் உற்பத்தியைக் காட்டிலும் அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

இயற்கை எரிபொருட்களுக்கான பெருகிவரும் தேவை, பெருகி வரும் மக்களின் தேவைகள், இந்தியாவிலும் சீனாவிலும் அதிக கொள்முதல் திறன் கொண்ட மத்திய தர வகுப்பினரின் பெருக்கம், அபாயகரமாக மாறிவரும் தட்பவெப்ப நிலை ஆகியவை உணவுப் பொருள் விலை அதிகரிப்பை தீர்மானிக்கின்றன என்றும், இதனால் 10 கோடிக்கும் அதிகமானோர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஐ. நா. உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அரசு சாரா உதவிக் குழுக்கள் ஐ.நா.விற்கான தங்கள் உதவித் திட்டங்களை குறைத்து வருகின்றன.

கடந்த ஜூன் மாதத்தில் ஐ.நா. உலக உணவு திட்டத்திற்கு பங்களிப்பு செய்தவர்கள் தற்போது வரை பங்களிப்பு செய்து வந்த போதும் கடந்த ஜூனைக் காட்டிலும் 40 விழுக்காடு குறைவாக உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

யூனிசெஃப் தலைமை இயக்குனர் ஆன் வெனிமேன் இது குறித்து கூறுகையில், குறைந்த வருவாய்ப் பிரிவினர், வளர்ச்சியுறாத நாடுகளில் இந்த உணவுப் பொருள் விலை உயர்வின் தாக்கம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

"பசியின் புதிய முகம்" என்று இதனை வர்ணிக்கும் ஆன் வெனிமேன் கடந்த 6 மாத காலங்களில் கோடிக்கணக்கானோர் உணவுப் பொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்