இத்தாலியில் மகாத்மா காந்தியின் சிலை திறப்பு!

சனி, 15 மார்ச் 2008 (20:14 IST)
மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை இத்தாலியின் 'பார்கோ விர்ஜிலியானா' பகுதியில் இன்று திறக்கப்பட்டது.

இத்தாலிக்கான இந்திய தூதர் ராஜிவ் டோக்ரா, நேப்ல்ஸ் நகரத் தலைவர் ரோசா இர்வோலினோ ஆகியோர் சிலையை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இத்தாலிய பொதுமக்கள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இரண்டு பேருந்துகளில் வந்த கசோரியா காந்தி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் பிரபல சிற்பி கவுதம் பால் செதுக்கியுள்ள இந்த மகாத்மா காந்தியின் சிலையை, இந்திய பண்பாட்டு நல்லுறவுத்துறை குழு பரிசாக வழங்கியுள்ளது. கவுதம் மிலானில் உள்ள கல்வி நிறுவனத்தில் தான் சிலை வடிப்பில் பட்டயம் பெற்றவர்.

அவரது கருத்துக்கள் இத்தாலியர்களுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளதால், இத்தாலி முழுவதிலும் காந்தியின் பெயரில் 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.

நிகழ்ச்சியில் ராஜிவ் டோக்ரா பேசுகையில், ‘வன்முறைக்கு எதிரான காந்தியின் நடவடிக்கை, செயல்பாடுகளால் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் தொடர்ந்து தூண்டப்பட்டு வருகின்றனர். மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறை இத்தாலிய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது பழங்கால நாகரிகங்களை கொண்ட இந்திய, இத்தாலி நாடுகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான சான்றாக விளங்குகிறத’ என்றார்.

’இத்தாலியின் அமைதி நகரமான நேப்ல்ஸில் மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது கருத்துக்கள் அனைத்து மக்களுக்கும் ஊக்கமளிப்பதாகவும், தூண்டுதலாகவும் அமையும் என்று நம்புகிறேன’ என்று ரோசா இர்வோலினோ பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்