லாகூரில் இரட்டை குண்டுவெடிப்பு: 20 பேர் பலி!
செவ்வாய், 11 மார்ச் 2008 (13:43 IST)
லாகூரில் உள்ள புலனாய்வுத்துறை அலுவலகம், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி வீட்டிற்கு அருகில் உள்ள விளம்பர நிறுவனம் ஆகிய இடங்களில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
கடற்படை கல்லூரி வளாகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரமான லாகூரில் உள்ள பாகிஸ்தான் புலனாய்வுத்துறை அலுவலகத்தின் ஏழு மாடிக் கட்டடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. இதில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 175க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று முதல் தகவல்கள் தெரிவித்தாலும், கட்டடத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுதான் வெடித்துள்ளது என்று அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். இதில் ஏழு மாடிக் கட்டடத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது.
இதையடுத்துச் சிறிது நேரத்தில் மாடல் டவுன் குடியிருப்புப் பகுதியில் அடுத்த குண்டு வெடித்தது. அங்குள்ள விளம்பர அலுவலகம் ஒன்றின் அருகில் பதுங்கியிருந்த இளைஞர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றும், இது நிச்சயமாகத் தற்கொலைத் தாக்குதல்தான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதுடன் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
மேலும், இந்தக் குடியிருப்புப் பகுதியில்தான் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரியின் வீடும், அலுவலகமும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.