மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாரிசன் தேசிய முன்னணிக்குப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைக் காட்டிலும் மிகக் குறைவான இடங்களில் மட்டுமே இக்கூட்டணியால் வெற்றிபெற முடியும் எனத் தெரிகிறது.
மலேசியாவில் 214 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், மாநில பேரவைத் தொகுதிகளுக்கும் சனிக்கிழமை நடந்தது. இதில் 65 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப் பதிவு முடிந்த சிலமணி நேரங்களிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முடிவுகள் வெளிவரத் தொடங்கின. சில தொகுதிகளில் முடிவுகள் வெளியானதுமே ஆளும் கூட்டணி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழப்பது உறுதியாகிவிட்டது.
ஹின்ட்ராஃப் தலைவர் வெற்றி!
மலேசியாவில் இந்திய வம்சாவளியினருக்கு சம உரிமை வேண்டும் எனக் கேட்டுப் போராடிய ஹின்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் மனோகரன், செலங்கோர் தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட பாரிசன் தேசிய முன்னணி வேட்பாளர் சிங் சூ சென் என்பவரைத் தோற்கடித்தார்.
அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக மனோகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவரது மனைவி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ் அமைச்சர் தோல்வி!
ஆளும் கூட்டணி அரசில் இடம் பெற்று இருந்த ஒரே தமிழ் அமைச்சர், டத்தோ சாமிவேலு இந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அவர் பெராக் மாநிலத்தில் உள்ள சஞ்சியி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவரை மக்கள் நீதிக் கட்சி என்ற எதிர்க்கட்சி வேட்பாளர் டி.ஜெயக்குமார் தோற்கடித்தார்.
இந்தியர்கள் மீது மலேசிய அரசு அடக்குமுறையை ஏவிவிட்டு அவர்களை கைது செய்த போது டத்தோ சாமிவேலு இந்தியர்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுவே அவரது தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த 30 ஆண்டு காலமாக அமைச்சர் பதவி வகித்து வந்த டத்தோ சாமிவேலு, 8 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டவர். இது ஆளும் கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப நலத்துறை அமைச்சர் ஷாரிஜாத்தும் தோல்வியைத் தழுவினார்.