'பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் தலையிடவில்லை' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அயலுறவுத் துறை இணையமைச்சர் டாம் கேசே, "பாகிஸ்தான் மக்களால் ஜனநாயக முறைப்படி, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள் புதிய கொள்கைகளை மேம்படுத்தி தங்களது உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வார்கள். தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலின் போதும் சரி, தற்போதும் சரி அந்நாட்டின் உள்விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவில்லை.
பாகிஸ்தானில் முழு ஜனநாயகம் ஓங்கும் என்று நம்புகிறோம். அந்நாட்டுத் தலைவர்கள் உரிய பொறுப்பில் இருந்தால் மட்டுமே கொள்கைகளை வகுக்க முடியும். இவ்வாறு கூறுவதால், பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக அர்த்தமல்ல. பாகிஸ்தான் அரசுடன் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன" என்றார்.
மற்றொரு கேள்விக்கு, "பிப்ரவரி 18-ம் தேதி நடந்த பாகிஸ்தான் தேர்தலின் வெற்றி ஜனநாயகத்திற்கும், ஜனநாயகத்தால் அந்நாட்டின் வளர்ச்சியை விரும்புபவர்களுக்கும் கிடைத்த வெற்றி. இதனை அனைவரும் தெளிவாக புரிந்துகொண்டிருப்பர்" என்று கேசே பதிலளித்தார்.