பாக். சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை!
புதன், 27 பிப்ரவரி 2008 (15:33 IST)
சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களையும், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களையும் விடுதலை செய்ய இருநாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளன.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இந்திய- பாகிஸ்தான் நீதிக் குழுக் கூட்டத்தில், இருநாட்டுச் சிறைகளிலும் உள்ள இதுபோன்ற கைதிகளின் விவரங்களை ஏப்ரல் மாதத்திற்குள் தயாரிக்கும்படி இருநாட்டு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் சிறைகளில் சிறு குற்றங்களுக்காகப் பரஸ்பரம் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8 உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நீதிக் குழு அமைக்கப்பட்டது.
ஆதாரமில்லாமல் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள், எல்லை தாண்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள், கடல் எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடித்த மீனவர்கள், விசாக்களைப் புதுப்பிக்காமல் தங்கியுள்ள இருநாட்டுக் குடிமக்கள் ஆகியோரும் சிறு குற்றங்கள் பட்டியலில் வருவார்கள் என்று கூட்டு நீதிக் குழு தெரிவித்துள்ளது.
இருநாடுகளின் அயலுறவு, உள்துறை அமைச்சகங்களின் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க இந்தக் கூட்டம் உதவும் என்று தான் நம்புவதாக பாகிஸ்தான் தரப்பு குழு உறுப்பினரான ஓய்வுபெற்ற நீதிபதி நசீர் அஸ்லாம் ஜாகித் கூறினார்.