புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்: முஷாரஃப்!
சனி, 23 பிப்ரவரி 2008 (12:37 IST)
பாகிஸ்தானில் புதிதாக அமைய உள்ள அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் முஷாரப்பின் ஆதரவுப்பெற்ற கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. முக்கிய எதிர்க்கட்சிகளான மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து அந்த இரு கட்சிகளின் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்துள்ளதோடு, தொடர்ந்து அதிகார பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் புதிதாக அமைய உள்ள நாடாளுமன்றத்துடனும், பிரதமருடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் மக்கள் ஜனநாயகத்தின் மீது உள்ள அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக அமைய உள்ள அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நேரம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.