நவாஸ் ஷெரீஃப்புடன் கூட்டணி வேண்டாம்: முஷாரஃப் கோரிக்கை!
புதன், 20 பிப்ரவரி 2008 (16:44 IST)
பாகிஸ்தான் தேசியச் சட்டப் பேரவைத் தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரியைச் சந்தித்த முஷாரஃப் ஆதரவாளர்கள், நவாஸ் ஷெரீஃப்புடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் தேசியச் சட்டப் பேரவைத் தேர்தலில் முடிவுகள் வெளியான 259 இடங்களில் 87 இடங்களைப் பாகிஸ்தான் மக்கள் கட்சி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 66 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இவ்விரு கட்சிகளும் அதிபர் முஷாரஃப்பிற்கு எதிரானவை என்பதால், இவை இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் என்றும், அதற்கான பேச்சுகள் நாளை நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேசியப் பாதுகாப்புக் கழகத்தின் செயலர் தாரிக் ஆஜிஸ் உள்ளிட்ட முஷாரஃப்பின் நெருங்கிய ஆதரவாளர்கள் நேற்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரியைச் சந்தித்து, அரசமைப்பது தொடர்பாக நவாஸ் ஷெரீஃப்புடன் பேச்சு நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இருந்தாலும், இதுபற்றி ஆஷிப் அலி ஜர்தாரி உடனடியாகக் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்றும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (குலாமி) யுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எதுவும் அவருக்கு இல்லை என்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் கூறினர்.