தேர்தலில் முஷாரஃப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ), மறைந்த பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ஆகிய 3 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
முஷாரஃப்பிற்குப் பெரும் சரிவு!
சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்புடன் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. மாலை 5.30 மணிக்கு வாக்குப் பதிவு முடியும் போது, சராசரியாக 35 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தது. இதையடுத்துச் சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
விடிய, விடிய வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நள்ளிரவு 2 மணி முதல் முடிவுகள் வெளியிடப்பட்டன. நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையிலேயே முடிவுகள் அமைந்தன.
நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 272 இடங்களில் 269 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 163 இடங்களின் முடிவுகள் காலை 9 மணிக்கு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 52 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகித்தது. பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 47 இடங்களைப் பிடித்து 2-வது இடத்தில் இருந்தது. ராவல்பிண்டி, பஞ்சாப் மற்றும் மத்திய மாகாண வாக்காளர்கள் பெருமளவில் நவாஸ் ஷெரீஃப் கட்சிக்கு வாக்களித்தது தெரியவந்துள்ளது. சிந்து மாகாணத்தில் பெனாசிர் கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
முஷாரஃப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்தனர். காலை 9 மணி நிலவரப்படி முஷாரஃப் ஆதரவாளர்களில் 19 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். சிறிய கட்சிகள், சுயேட்சைகள் 45 இடங்களில் வெற்றி பெற்றனர்.
பாகிஸ்தானில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 137 உறுப்பினர்கள் தேவை. தேர்தல் முடிவுகளின்படி எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது.
அமைச்சர்கள் படுதோல்வி!
முஷாரஃப் ஆதரவாளர்களில் முக்கியத் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்த பலர் படுதோல்வி அடைந்துள்ளனர்.
பஞ்சாப் தொகுதியில் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சித் தலைவர் சவுத்திரி சுஜத் ஹூசைனை, பெனாசிர் கட்சி வேட்பாளர் சவுத்திரி அகமது முக்தார் தோற்கடித்தார். இதனால் முஷாரஃப் ஆதரவாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சியின் தலைவர்களில் ஒருவர் கூறுகையில், "தேர்தல் முடிவை நம்ப முடியவில்லை. கடும் அதிர்ச்சியாக உள்ளது'' என்றார்.
ராவல்பிண்டி தொகுதியில் 7 தடவை வெற்றி பெற்றவரும், முஷாரஃப்பின் நம்பிக்கைக்கு உரியவருமான ஷேக் ரசீத் அகமதுவும் படுதோல்வியை சந்தித்தார். முஷாரஃப்பின் வலதுகரம் என்று வர்ணிக்கப்படும் ஜூபைதா ஜலால், செக்வடார் தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார்.
மாகாணங்களில் முஷாரஃப் ஆதரவாளர்கள் தோல்வி!
நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலுடன் நடந்த பஞ்சாப், சிந்து, பெஷாவர், பலுசிஸ்தான் ஆகிய 4 மாகாண சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் முஷாரஃப் ஆதரவாளர்கள் பெரும் சரிவைச் சந்தித்தனர்.
பஞ்சாப் மாகாணத்தில் மொத்தம் உள்ள 297 இடங்களில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 81 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. சிந்து மாகாணத்தில் மொத்தம் உள்ள 130 இடங்களில் பெனாசிர் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது.
இதற்கிடையில், மக்கள் அளித்த இந்த தீர்ப்பை ஏற்றுத் கொள்வதாக முஷாரஃப் ஆதரவு தலைவர்கள் அறிவித்துள்ளனர்.