மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா படையினருக்கும் நடந்த கடும் மோதிலில் 11 படையினர் கொல்லப்பட்டனர். 23 பேர் காயமடைந்தனர்.
மன்னார் மாவட்டம், பண்டிவிரிச்சான் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி நேற்று காலை 10 மணிக்கு சிறிலங்கா படையினர் முன்நகர்ந்த போது விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
படையினரின் இம் முன்நகர்வு பிற்பகல் 3:20 மணிக்கு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. படையினர் அவர்களின் நிலைகளுக்கு விரட்டியடிக்கபட்டனர். செறிவான எறிகணைச் சூட்டாதரவினை நடத்தி படையினரின் இம் முன்நகர்வு முறியடிக்கப்பட்டது. இதில் 4 படையினர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்.
இரு வெவ்வேறு நேரங்களில் படையினர் இம் முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். பாலக்குழியில் நேற்று காலை படையினர் மேற்கொண்ட முன்னகர்வும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
அதேநேரம் பாலமோட்டைப் பகுதி ஊடாக நேற்று படையினர் நடத்திய தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் 7 படையினர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.
அப் பகுதியிலும் நேற்று பிற்பகல் 12:45 மணிக்கு படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி முன்நகர்வினை மேற்கொண்டனர்.
பிற்பகல் 2:30 மணிவரை நடைபெற்ற விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலை அடுத்து படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கினர் என்று புதினம் இணையதளம் செய்தி தெரிவிக்கிறது.