அமெரிக்க பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு: 5 மாணவர்கள் பலி!
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (15:00 IST)
அமெரிக்காவின் வடக்கு இல்லினாஸ் பல்கலைகழகத்தில் மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 மாணவிகள் உட்பட ஐந்து பேர் பலியாயினர்; 16 பேர் காயமடைந்தனர்.
பல்கலைகழகத்தின் கருத்தரங்கு அறையில் நேற்று பிற்பகல் மாணவர்களுக்கு வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது உயரமான கருப்பு நிற உடை, தொப்பி அணிந்திருந்த ஒரு மர்ம மனிதன் அறையின் மேடைக்கு சென்றான். தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அறையில் கூடியிருந்த மாணவர்களை நோக்கி சுட்டான்.
30 குண்டுகளுக்கு மேல் சிதறவிட்ட அந்த மர்ம மனிதன் இறுதியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டான். இதில் மர்ம மனிதன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதுதவிர காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'இந்த சம்பவம் சில வினாடிகளில் நடந்துமுடிந்துவிட்டது. அவன் யார் என்பது அடையாளம்தெரியவில்லை' என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காதலர் தினத்தன்று பல்கலைகழகத்திற்குள் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்தும் அறியப்படவில்லை. மர்ம மனிதனிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கி உட்பட 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது கடந்த எட்டு மாதங்களில் அமெரிக்கா பல்கலைகழகங்களில் நடந்துள்ள மூன்றாவது துப்பாக்கி சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.