பாகிஸ்தானில் கடும் மோதல்: 30 தலிபான்கள் பலி!
திங்கள், 28 ஜனவரி 2008 (12:22 IST)
வடமேற்கு பாகிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 30 தலிபான்கள் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் டாரா ஆதம் கெல் நகரத்திற்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலிபான்கள் ஆக்கிரமித்தனர். அவர்களிடம் இருந்து சுரங்கப் பாதையை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், ராணுவத்தினருக்கு வெடிபொருட்களைக் கொண்டுவந்த 4 வாகனங்களை தலிபான்கள் கடத்தி அழித்தனர். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய தீவிரத் தாக்குதலில் 24 தலிபான்கள் கொல்லப்பட்டதுடன், 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த மோதலால் கொஹாட், பெஷாவர் நகரங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுரங்கப் பாதை மீட்கப்பட்ட பின்பே நிலைமை சீரடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல வடக்கு வசிரிஸ்தானில் நடந்த தாக்குதலில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டதுடன், 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.