'எங்களின் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்கும் காலம் வரும்' : விடுதலைப் புலிகள்!
சனி, 19 ஜனவரி 2008 (20:22 IST)
தமிழ் மக்களின் ஏக்கத்தைப் புரிந்து தனது கொள்கையை மாற்றிக் கொண்டு தங்களின் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஆஸ்ட்ரேலியச் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், " இலங்கையின் அண்டை நாடான இந்தியா தங்களின் நியாயத்தை உணர்ந்து, தங்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் என்ற ஏக்கம் தமிழ் மக்களுக்கு நீண்ட நாட்களாகவே உள்ளது. இந்திய அரசு கூட தற்போது அதை உணர்வதாகத் தெரிகிறது. இதனால் இந்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொண்டு எங்களின் போராட்டத்தை அங்கீகரிக்கின்ற காலம் வெகுவிரைவில் வரும் என நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசு, 'போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம்' என்று அறிவிப்பதற்கு முன்பே போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டது என்று குற்றம்சாற்றியுள்ள நடேசன், அந்த ஒப்பந்தம் கையெழுத்தான காலத்தில் இருந்து அதன் ஒவ்வொரு சரத்துகளையும் வேண்டுமென்றே மீறி அதைக் குழப்புகிற நோக்கத்தில் சிறிலங்கா அரசு செயல்பட்டதாகக் கூறியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளையும் வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள விடாமல் தடுத்ததுடன், அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகிற ஒவ்வொரு விடயத்தையும் சிறிலங்கா அரசு மீறியதைச் சர்வதேச நாடுகள் தற்போது நன்றாக புரிந்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ள நடேசன், அதன் இறுதிக் கட்டமாகத்தான் தற்போது அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது என்றுள்ளார்.
மேலும், சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையை சர்வதேச நாடுகளின் அமைதி முயற்சிகளின் மீது விழுந்த அடியாகத்தான் பார்க்க வேண்டும் என்பதையும், சர்வதேச நாடுகளை உதாசீனப் படுத்துகிற செயலாகத்தான் இது உள்ளது என்பதையும் உலகம் உணர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போர் ஏற்கெனவே வெடித்து விட்டது!
சர்வதேசச் செய்தியாளர்களும், ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் ஜனவரி 16 ஆம் நாள் நள்ளிரவிற்குப் பின்னர் போர் மிகத் தீவிரமாக வெடிக்கப்போகிறது என்று கணித்ததைப் பற்றிக் கேட்டதற்கு, "போர் ஏற்கனவே வெடித்து விட்டது. மன்னாரில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. அதேவேளை முகமாலை, மணலாற்றுப் பிரதேசம், வவுனியா மாவட்ட பிரதேசம் எனப் பல முனைகளிலும் சிறிலங்கா படைகள் முன்னேற முயற்சித்து இழப்புக்களைச் சந்தித்து பின் வாங்கிக் கொண்டிருக்கின்றன. இராணுவ நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டார்கள் என்பதனையே இது காட்டுகிறது." என்றார் நடேசன்.
இறுதியாக, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு உட்பட்ட ஒரு அதிகாரத் தீர்வுத் திட்டம் என்பது இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு சரியான வழியா என்று கேட்டதற்கு, "13 ஆவது சரத்தின் அடிப்படையிலான தீர்வு என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுதாக நிறைவு செய்யக்கூடிய வகையில் இருக்காது.உண்மையில் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அவர்கள் இன்னும் விரும்பவில்லை" என்றார் நடேசன்.