பறவை காய்ச்சல் எதிரொலி: இந்திய கோழிகளுக்கு பூடானில் தடை!
வியாழன், 17 ஜனவரி 2008 (17:30 IST)
மேற்கு வங்கத்தில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, முட்டைகளுக்கு பூடான் அரசு தடை விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பிர்பும், பினாஜ்பூர் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் தீவிரத்தால், 4 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் நோய் ஏற்பட்டாலும், அது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதிக்கும் பாதிப்பாக அமைந்து விடுகிறது. எனவே, 'பறவை காய்ச்சல் நோய் பீதியால், நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முட்டை ஏற்றுமதியும் பாதிக்கப்படாமல் தடுக்க நாமக்கல்லை தனி மண்டலமாக அறிவிக்க வேண்டும்' என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பறவை காய்ச்சல் தீவிரத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கோழி, முட்டைகளுக்கும் பூடான் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலவரையற்ற இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
"இந்திய அரசு தங்களது நாட்டில் பறவை காய்ச்சல் இல்லை என்று அறிவிக்கும் வரை இந்த தடை அமலில் இருக்கும்" என்று அந்நாட்டின் முதன்மை கால்நடைத்துறை அதிகாரி கர்மா டென்ஷின் அறிவித்துள்ளார்.
'இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன் கோழிகளும், 30 ஆயிரம் பெட்டி முட்டைகளும் பூடானுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து இறக்குமதி உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது' என்று பூடான் வேளாண்மை மற்றும் உணவு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.