சிறிலங்கா அரசின் முடிவினால் நெருக்கடி : அமெரிக்கா!
வெள்ளி, 4 ஜனவரி 2008 (19:33 IST)
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியதால் அந்நாட்டு அரசியலில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
"கடந்த 2002 ஆம் ஆண்டு நார்வேயின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறி உள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நடந்துவரும் மோதல்களுக்கு அமைதியான வழியில் தீர்வு காணும் முயற்சிகளை இது மேலும் சிக்கலாக்கியுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகளையும், சிறிலங்கா அரசையும் கேட்டுக் கொள்கிறோம்.
மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதால், அனைவரும் அரசியல் தீர்வை நோக்கிச் செயல்பட்டு சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்." என்று அமெரிக்கா கூறியுள்ளது.
கனடா கவலை!
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறி உள்ளது பற்றிக் கனடா கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகக் கனடாவின் அயலுறவு அமைச்சர் மேக்சிம் பெர்னியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியது மிகுந்த கவலை அளிக்கிறது.
சிறிலங்கா அரசின் நடவடிக்கையால் வன்முறைகள் அதிகரிக்கும் என்றும், பொது மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மனிதாபிமானத் தொண்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் நாங்கள் கவலைப்படுகிறோம்.
வன்முறைகள் தீர்வைத் தருவதில்லை. அது சிறிலங்கா மக்களுக்கு இன்னும் அதிகமான அழிவுகளையே தரும்.
இதனால், மனித உரிமைகளை மதித்து அரசியல் தீர்வை நோக்கிச் செயலாற்ற வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அப்போது தான் அமைதி ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.