சவூதியில் ஒட்டகங்கள் பங்கேற்ற அழகுப் போட்டி!
Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (15:27 IST)
அழகான பெண்களுக்காக நடத்தப்பட்டு வந்த அழகிப்போட்டிகள் வரிசையில் தற்போது ஒட்டகங்களும் சேர்ந்துள்ளன. ஒட்டகங்களுக்கான அழகு போட்டி வளைகுடா நாடுகளில் நடத்தப்படுகிறது.
சவூதி தலைநகர் ரியாத்தில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள உம் ரெக்ஃபியா என்ற பாலைவனப் பகுதியில் ஒட்டக உரிமையாளர்கள் ஒன்று கூடி மிகவும் அழகான ஒட்டகத்தைத் தேர்வு செய்கின்றனர். போட்டியில் ஒட்டகங்களை தேர்ந்தெடுக்க முக்கிய தகுதியாக ஒட்டகங்களின் மூக்கு இடம் பெற்றுள்ளது. இது போன்ற ஒரு போட்டி கடந்த சனிக்கிழமை நடைப்பெற்றுள்ளது.
பெரிய, கீழ்நோக்கியதாக அமைந்திருக்கும் மூக்கு தான் ஒட்டகங்களுக்கு மிகவும் கவர்ச்சியையும், அழகையும் தருவதாக கருதப்படுகிறது. காது மடல்கள் பின்நோக்கி நேராக இருத்தல், கழுத்து மிகவும் நீளமாக இருப்பது, திமில் உயர்ந்து இருப்பதுடன் சிறிது பின்னால் இருப்பது ஒட்டகங்களுக்கு நேர்த்தியாக இருக்கும் என்று இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த சுல்தான் அல் கியூ அதானி தெரிவித்துள்ளார்.
இது போன்ற ஒட்டகப் போட்டிகள் லெபனானில் மிஸ் லெபனான் என்ற பெயரில் நடத்தப்படுவதாகவும், சவூதியில் இது மிஸ் ஒட்டகம் என்று நடத்தப்படுவதாகவும் வாலித் என்பவர் கூறியுள்ளார்.