உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் பாயும் : மலேசிய பிரதமர் மிரட்டல்!

சனி, 8 டிசம்பர் 2007 (16:42 IST)
மலேசிய நாட்டின் நலனிற்கு எதிராக இந்திய வம்சாவழியினர் நடந்துகொண்டால் அவர்கள் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மலேசிய பிரதமர் மிரட்டல் விடுத்துள்ளார்.

மலேசிய இந்தியர்களின் உரிமைக்காகப் போராடிவரும் ஹின்ட்ராஃப் அமைப்பு, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அந்நிய நாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் ரகசிய உறவை வைத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில் இப்படிப்பட்ட மிரட்டலை மலேசிய பிரதமர் அப்துல்லா அஹமது பதாவி விடுத்துள்ளார்.

நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் என்ற நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில், ஹின்ட்ராஃப் அமைப்பின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது ஒரு வழி. சரியான நேரத்தில் அதனை முடிவு செய்வேன். அவர்கள் தேச நலனிற்கு அச்சுறுத்தல் என்று தெரிந்தால், என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்” என்று பிரதமர் பதாவி கூறியுள்ளார்.

உள்ளூர் சமூக விரோதிகள், பயங்கரவாத இயக்கங்கள் ஆகியவற்றுடன் அவர்களுக்கு (ஹின்ட்ராஃப்) தொடர்பு உள்ளது தனக்கும் தெரியும் என்று பதாவி கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளில் ஆதரவு திரட்டச் சென்றுள்ள ஹின்ட்ராஃப் தலைவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களையும் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. அவ்வாறு அவர்களை ஹின்ட்ராஃப் தலைவர்கள் சந்தித்தால் அவர்களையும் பயங்கரவாதிகளாகவே கருதுவோம் என்று அந்நாட்டு அமைச்சர் மொஹம்மது நஜ்ரி அஜீஸ் கூறியதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் ஸ்டார் எனும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்