அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் பேச்சில்லை: அமெரிக்கா!
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (15:12 IST)
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்தவேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அயலுறவுத் துறையின் அரசியல் விவகார அமைச்சக இணையமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறுகையில், ''123 ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வாஷிங்டன்னில் முடிந்துவிட்டது. இதனால் அணு சக்தி ஒப்பந்தத்தின் இறுதி வடிவமும் முடிந்துவிட்டது. தற்போது இந்த ஒப்பந்தம் இருநாட்டு அரசுகளின் ஒப்புதலுக்காக மட்டும்தான் காத்திருக்கிறது. அதுவும் விரைவில் நிறைவேறும் என்று நினைக்கிறேன்'' என்றார்.
''இந்த ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என்று இருதரப்பிலும் கோரிக்கை வரக்கூடாது என்று விரும்புகிறேன். அமெரிக்கா ஒருபோதும் கூறாது, இந்தியாவும் கோரிக்கை வைக்காது என்று நம்புகிறேன்'' என்றும் அவர் கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தத்தின் நன்மைகள் தொடர்பாக அவர் கூறுகையில், ''இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்திய- அமெரிக்க நல்லெண்ண உறவுகள் மேம்படுவதற்கான புதிய முயற்சிகளை எடுக்க முடியும். சர்வதேச அணுசக்தி முகமையுடன் தனிப்பட்ட கண்காணிப்பு ஒப்பந்தத்தை இந்தியா விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது இருதரப்புக்கும் பல நல்ல பலன்களை அளிக்கும்'' என்றார்.
மேலும், கண்காணிப்பு ஒப்பந்தத்திற்கு அடுத்தபடியாக அணு எரிபொருள் வழங்கும் 45 நாடுகள் குழுவுடனும் இந்தியா வெற்றிகரமாக பேச்சு நடத்த வேண்டும் என்ற நிக்கோலஸ், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க காங்கிரசில் அணுசக்தி ஒப்பந்தம் இறுதி வாக்கெடுப்புக்கு வரும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.