பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் : இந்திய-அமெரிக்க கூட்டுக் குழு!
Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (15:51 IST)
பயங்கரவாதத்திற்கு எதிராக பரந்த மனப்பான்மையுடன் தொடர்ச்சியாகப் போராடுவதற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று இந்திய - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாஷிங்டன்னில் இந்திய - அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுக் குழுவின் கூட்டம் நடந்தது. இதில் உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேசப் பாதுகாப்பு, அமைதி, ஒருமைப்பாடு, ஜனநாயகம் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தின் எல்லா வடிவங்களுக்கும் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. பொது அவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும், உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட வரைவை இறுதி செய்ய வேண்டும் என்றுஇரு நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
பயங்கரவாதத்தை எந்த அடிப்படையில் நியாயப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு எதிராக பரந்த மனப்பான்மையுடன் தொடர்ச்சியாகப் போராடுவதற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இக்கூட்டத்திற்கு இந்தத் தூதர் கே.சி.சிங் தலைமை வகித்தார். அமெரிக்கா தரப்பில் பயங்கரவாதத்திற்கு எதிரான ஐ.நா. கூட்டமைப்பின் உறுப்பினர் டெல் டெய்லி பங்கேற்றார்.
தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் வளர்ந்து வரும் பயங்கரவாதம், உயிரியல் பயங்கரவாதம், பயங்கரவாத எதிர்ப்பு உதவிப் பயிற்சித் திட்டம், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, நிதி மோசடி, பயங்கரவாதத்தின் அடிப்படைப் பன்முகங்கள், பயங்கரவாதச் செயல்களுக்கு ஒன்றுபடுதல், தகவல் பரிமாற்றம் உள்படப் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.