பாக். பயங்கரவாதிகளிடம் அணுகுண்டு: அமெரிக்கா அச்சம்!
Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (12:41 IST)
பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃப் பிரகடனம் செய்துள்ள அவசரநிலையின் விளைவாக, அங்குள்ள அணுகுண்டுகள் பயங்கரவாதிகளிடம் சிக்க வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ராணுவத் தளபதியான அதிபர் பர்வேஷ் முஷாரஃப், கடந்த 1999-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். தற்போது தனது பதவி ஆசையின் காரணமாக அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.
நீதித்துறையின் அதீதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், அதிகரித்துள்ள அல் காய்டா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்று முஷாரஃப் விளக்கமளித்துள்ளார்.
ஆனால், நவீனங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்த விரும்பும் அல் காய்டா போன்ற பயங்கரவாத இயக்கங்களின் கைகளில் அணுகுண்டோ, அணு எரிபொருளோ சிக்குவதற்கு அவசரநிலை வாய்ப்பளித்துள்ளது என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
அதிபர் முஷாரஃப்பிற்கு எதிராக உள்ள சில அதிகாரிகள் பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவக்கூடும் என்று, நியூஸ்வீக் இதழுக்குப் பேட்டியளித்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புக் கழக முன்னாள் இயக்குநர் புரூஸ் ரீடில் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பழைய நிலையைத் திரும்பக் கொண்டுவராவிட்டால் அந்நாட்டுடன் உள்ள எல்லா நட்புறவுகளையும் துண்டிக்க நேரிடும் என்று அதிபர் ஜார்ஜ் புஷ் எச்சரிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் வெளிப்படையான பொதுத் தேர்தல் நடத்த வேண்டும், அதிபர் முஷாரஃப் முன்பு வாக்களித்தபடி தனது ராணுவப் பதவியை விட்டு விலக வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பைடன் கூறினார்.
பயங்கரவாதத்தை ஒழிக்க ஜனநாயகமே சரியான தீர்வு என்றும் நெருக்கடி நிலை மூலம் கட்டுப்பாட்டைக் கொண்டுவர நினைத்தால், பயங்கரவாதக் கிணறுகள் ஊற்றெடுக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பாகிஸ்தான் பெறும் என்றும் அவர் எச்சரித்தார்.