பாகிஸ்தா‌னி‌ல் அவசரநிலை பிரகடனம்!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (19:34 IST)
பாகிஸ்தான் அதிபரும், அந்நாட்டு ராணுவத்தின் தலைமைத் தளபதியுமான பர்வேஸ் முஷா·ப் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி கூறியுள்ளது!

பாகிஸ்தானில் அவசரநிலையைப் பிரகடனம் செய்து அரசமைப்புச் சட்ட ரீதியான தற்காலிக உத்தரவை அதிபர் பர்வேஸ் முஷா·ப் பிறப்பித்துள்ளார் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்குள் புகுந்த காவல் பிரிவு ஒன்று அந்நாட்டு தலைமை நீதிபதியை சிறைவைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் ராணுவத்திள் தலைமைத் தளபதி பொறுப்பில் இருந்துகொண்டே அதிபர் தேர்தலில் பர்வேஸ் முஷா·ப் போட்டியிடலாமா கூடாதா என்பது குறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு எதிராக வரும் என்பதனை அறிந்துகொண்ட பின்னரே அவசர நிலையைப் பிரகடனம் செய்யும் முடிவை ஜென்ரல் பர்வேஸ் முஷா·ப் எடுத்துள்ளதாக அயல்நாட்டுச் செய்திகள் கூறுகின்றன.

அவசர நிலையைப் பிரகடனம் செய்தது மட்டுமின்றி, அந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முடக்கி வைக்கும் உத்தரவையும் முஷா·ப் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சிகளான ஜியோ நியூஸ், டான் நியூஸ் ஆகியன செய்திகள் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அவ்விரு தொலைக்காட்சிகளும் முடக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டுச் செய்திகள் கூறுகின்றன.

பாகிஸ்தான் அரசின் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் ராணுவம் கொண்டுவந்துள்ளதாகவும் அச்செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்