அனுராதபுரம் தாக்குதல்: 18 வானூர்திகள் அழிப்பு! 21 புலிகள் பலி!
Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (14:59 IST)
சிறிலங்க விமானப் படையின் அனுராதபுரம் தளத்தின் மீது நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 5 ஹெலிகாப்டர்களும், 18 போர் விமானங்களும், பயிற்சி விமானங்களும் அழிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
அனுராதபுரம் விமான தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலிலும் அவர்களுக்கு ஆதரவாக புலிகளின் விமானப் படை நடத்திய குண்டு வீச்சிலும் 8 வானூதிகள் அழிக்கப்பட்டதாக விடுதைலப் புலிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் இத்தாக்குதலில் சிறிலங்க விமானப் படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக லண்டனில் இருந்து வெளிவரும் டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது,
பீச் ரக கண்காணிப்பு ரக விமானங்கள் - 1, எம்.ஒய். ரக விமானங்கள் - 2 . எம்.ஒய். 24 ஹெலிகாப்டர்களும் - 2, ஆளில்லா உளவு விமானங்கள் - 3, கே 8 பயிற்சி விமானம் - 1, ப்ரீ 6 பயிற்சி விமானங்கள் 8 ஆகியன அனுராதபுரம் விமான நிலைய தாக்குதலில் முழுமையாக அழிக்கப்பட்டதாக அச்செய்தி கூறுகிறது,
இதுமட்டுமின்றி பெல் 212 ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, விடுதலைப் புலிகளின் இத்தாக்குதல் சிறிலங்க அரசுக்கோ அதன் பாதுகாப்பு படைகளுக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன என்று கொழும்பு ஊடகங்கள் கூறியுள்ளன.
எல்லாலன் என்ற நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈடுபட்ட 21 கரும்புலிகள் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.