இந்திய-ரஷ்ய உறவு பலம் வாய்ந்தது

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (16:20 IST)
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் நட்பை பலப்படுத்திக் கொள்வதற்காக, 60 ஆண்டுகாலமாக நீடித்த நட்புணர்வில் இருந்துவரும் ரஷ்யாவினுடனான நட்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு பலம் வாய்ந்தது என்று மாஸ்கோ சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.ே. அந்தோணி தெரிவித்துள்ளார்!

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ சென்றுள்ள மத்திய அமைச்சர் அந்ததோணி, அலெக்ஸ்சாண்டரோவ்ஸ்கி கார்டனில் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யா எங்களுக்கு சிறப்பான, அதே நேரத்தில் முக்கியமான நண்பன் என தெரிவித்தார். இந்தப் பயணம் இரு நாடுகளிடையேயான 60 ஆண்டுகால நட்பை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு உட்பட்டு அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளுடன் நட்பை உருவாக்கி வருவதாகக் கூறிய அந்தோணி, அதற்காக பழைய நண்பர்களின் உறவை முறித்துக்கொள்வது என்று கருதக்கூடாது என கூறினார்.

மேலும் பிரதமர் வரும் நவம்பர் மாதம் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அவருடைய இந்தப் பயணம் ரஷ்யாவின் நட்பு எந்த அளவிற்கு முகியமானது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

சுகோய் போர் விமானங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் விலை உயர்வு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, இது தொடர்பாக ரஷ்ய அரசுடன் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அந்தோணி தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து நாளை முதல் இந்திய-ரஷ்ய கூட்டுக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை சுட்டிக்காட்டிய அந்தோணி, 5வது தலைமுறை போர் தளவாடங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகக் கூறினார்.

இதனிடையே, ரஷ்ய பாதுகாப்புததுறை அமைச்சர் அண்டாலி செர்டியோகோவை ஏ.ே. அந்தோணி நாளை சந்தித்துப் பேசுகின்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்