யாழ்ப்பாண நிலைமைகளை நேரில் அறிவதற்காகச் சென்ற சர்வதேச பெண் செய்தியாளர்களுக்கு சிறிலங்கா ராணுவம் திடீர் நிபந்தனைகளை விதித்ததால் தங்கள் பயணத்தை ரத்துச் செய்துவிட்டு கொழும்பு திரும்பிவிட்டனர்.
பிரிட்டானியாவின் சேனல் 4 என்ற தொலைக்காட்சிக்காக குயிக் சில்வர் மீடியா குழுவினர் மூவர் யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்றிருந்தனர். இதில் இருவர் வெளிநாட்டவர். ஒருவர் இலங்கையர். மூவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர்.
ஆனால் திடீரென மூவரையும் பலாலி இராணுவ முகாமுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். பலாலி இராணுவ முகாமில்தான் மூவரும் தங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து நேற்று இரவு தங்க வைத்துள்ளனர். மேலும் இன்று காலையில் யாழ்ப்பாண நகரப் பகுதிகளுக்கு 2 மணி நேரம் அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினரது இத்தகைய நடவடிக்கைகளால் செய்தியாளர்கள் இன்று வெள்ளிகிழமை பிற்பகலே கொழும்புக்குத் திரும்பிவிட்டனர்.
சிறிலங்கா இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தின் சிக்கல்கள் வெளி உலகுக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் செய்தியாளர்களுக்கு நிபந்தனைகளை விதித்து திரும்பிச் செல்லும் சூழலை உருவாக்கியுள்ளனர்.