மகாத்மாவை கெளரவிக்கவில்லையே : நோபல் அறக்கட்டளை வருத்தம்!
Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (14:12 IST)
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 138வது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் இந்த நேரத்தில், அவருக்கு அமைதிக்கான விருதை வழங்கத் தவறிவிட்டோமே என்று நோபல் அறக்கட்டளை வருத்தம் தெரிவித்துள்ளது.
அமைதிக்காகப் போராடிய மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவர் மனித விடுதலைக்கான போராளியாகவும் இல்லாமல், உண்மையான அரசியல்வாதியாகவும் இல்லாமல் இருந்த காரணத்தால் பரிசுக்குத் தகுதியற்றவர் என்று நார்வேயைச் சேர்ந்த நோபல் குழு கருதியது.
இருந்தாலும், அந்த முடிவு தவறானது என்று கருதுவதாக ஸ்வீடனைச் சேர்ந்த நோபல் அறக்கட்டளையின் செயல் இயக்குநர் மைக்கேல் சொஃலாம் கூறியுள்ளார்.
"நாங்கள் மிகப்பெரிய தலைவரைத் தவறவிட்டோம், அது காந்திதான். இது மிகுந்த வருத்தத்திற்கு உரியது" என்றும், "நான் வழக்கமாக பரிசு வழங்கும் அறக்கட்டளை பற்றியோ, நோபல் குழு பற்றியோ கருத்துத் தெரிவிப்பதில்லை. ஆனால், காந்தியைத் தவறவிட்டுள்ளதாக அவர்கள் தங்களுக்குள் வருந்துகிறார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.
காந்தி, 1937, 1938, 1939, 1947 ஆகிய ஆண்டுகளிலும், இறுதியாக 1948 ஜனவரி மாதம் அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
1948ஆம் ஆண்டு நோபல் குழு "பொறுத்தமான நபர் யாரும் இந்த ஆண்டு உயிருடன் இல்லை" என்று கூறி பரிசு வழங்க மறுத்துவிட்டது.