வெப்பமடைதலால் மறையும் தீவுகள் : ஐ.நா. எச்சரிக்கை!
Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (13:41 IST)
புவி வெப்பமடைந்து பெருங்கடல்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உலகத்தின் மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர் குடியிருக்கும் சிறிய தீவுகள் நீரில் மூழ்கி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன என்று ஐ.நா. கூறியுள்ளது!
இது தொடர்பாக நியூயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் 37 தீவு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
"புவி வெப்பமயமாதல் குறித்து கடந்த 15 ஆண்டுகளாக நிலக்கரிச் சுரங்கத்தில் எழுப்பப்படுவதைப்போல தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்து வருகிறோம்" என்று சாலமன் தீவுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாட்டெசன் ஓட்டி கூறியுள்ளார்.
பருவ நிலை மாற்றங்களுக்கு எதிராக போராடத் தவறினால், சாலமன் தீவுகளும், அதனுடன் சார்ந்த மற்ற தீவு நாடுகளும் எதிர்காலத்தில் பயங்கரமான புயல், மீன் வளக்குறைவு, பாறையரிப்பு போன்ற சிக்கல்களைச் சந்திப்பார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
"பருவநிலை மாற்றம் என்பது ஒரு அறிகுறிதானே தவிர நோயல்ல" என்று கூறிய ஓட்டி, " நோயானது உற்பத்திக் குறைவும், அதனால் ஏற்படும் பற்றாக்குறையும் ஆகும்" என்றார்.
பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் தீவு நாடுகளுக்கு நிதிதிரட்டவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஐ,நா சிறப்பு மாநாட்டின் ஒருபகுதியாக இக்கூட்டம் நடைபெற்றது.