அணு சக்தி ஒத்துழைப்பு : இந்தியா-யு.எஸ். இன்றும் பேச்சு!

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (13:31 IST)
இந்திய - யு.எஸ். அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர உருவாக்கப்பட வேண்டிய 123 ஒப்பந்தம் குறித்து இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது!

தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அயலுறவுச் செயலர் சிங்சங்கர் மேனன், இந்திய அணு சக்தி ஆணையத்தின் ஆர்.பி. குரோவர் ஆகியோர் கொண்ட இந்தியக் குழு, யு.எஸ். அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரத்திற்கான சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ், ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர், அணு சக்தி பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு இயக்குநர் ராபர்ட் ஸ்ட்ராட்ஃபோர்ட் ஆகியோர் கொண்ட குழுவினருடன் இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

அவசியம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் அணு சோதனை நடத்துவது, பயன்படுத்திய யுரேனியம் எரிபொருளை மறு ஆக்கம் செய்வது போன்ற உரிமைகளை விட்டுத்தர இயலாது என்று இந்தியா கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அமெரிக்க அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீஃபன் ஹாட்லியும் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு இருதரப்பினரும் அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைசை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இந்திய தரப்பிற்கு உதவ அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கரும் வாஷிங்டனில் உள்ளார்.

இரண்டு நாள் பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் நல்ல புரிந்துணர்வை எட்டியுள்ளதாகவும், எனவே இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பேச்சாளர் டோனி ஸ்னோ, "இந்திய-யு.எஸ். அணு சக்தி ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மிக அவசியமான ஒன்று என்றும், அதனை வெற்றிகரமாக இறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும்" கூறியுள்ளார். (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்