123 ஒப்பந்தம்: இந்தியா-யு.எஸ். நெருங்கி வந்துள்ளன-ஜெய்சங்கர்

Webdunia

செவ்வாய், 26 ஜூன் 2007 (13:43 IST)
இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வர உருவாக்கப்பட வேண்டிய 123 ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் மிகவும் நெருங்கி வந்துவிட்டன என்று இந்திய தூதர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கார்னகி அமைப்பு ஏற்பாடு செய்த அணு பரவல் தடுப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிங்கப்பூருக்கான இந்திய தூதரும், அணு சக்தி தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்தியக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான எஸ். ஜெய்சங்கர், 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதில் நிலவி வந்த இடைவெளிகள் மிகவும் குறைந்துவிட்டது என்றும், அந்த ஒப்பந்தத்தை முழுமை செய்வதில் அதிக பிரச்சனைகள் உள்ளதாக தான் கருதவில்லை என்றும் கூறியுள்ளார்.

இரு நாடுகளும் தங்களுடைய அரசியல் கொள்கைகளை சட்ட மொழிகளுக்கு மாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று கூறிய ஜெய்சங்கர், அணுசக்தி ஒத்துழைப்புத் தொடர்பாக 2005 ஜூலையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையையும், 2006 ஆம் ஆண்டு மார்ச்சில் பிரதமர், நாடாளுமன்றத்திற்கு அளித்த அறிக்கையையும் 123 ஒப்பந்தத்திற்கு உட்படுத்துவது எளிதான காரியம் அல்ல என்று கூறினார்.

"அது மிகவும் வாட்டுகின்ற பிரச்சினையாகும். கடுமையான மொழிகளைக் கொண்டு உறுதிமொழியை உருவாக்க வேண்டும். அதுதான் பெரும் சவாலாக உள்ளது" என்று ஜெய்சங்கர் கூறினார்.

அணு ஆயுத பரவல் தடுப்பும், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தமும் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்திலும் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தூதா ஜெய்சங்கர், வாஷிங்டன் வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், 123 ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் பேச உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
(பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்