அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவுடனான உறவை ஆழப்படுத்துவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்!
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவருமான ஹில்லாரி கிளிண்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நியூயார்க்கில் நடந்த இந்திய-அமெரிக்க நிதி சேகரிப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு கூறினார்.
"இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டியது உள்ளது" என்று ஹில்லாரி கூறியுதும் அந்நிகழ்ச்சியில் கூடியிருந்த இந்திய-அமெரிக்கர்கள் கையொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
அமெரிக்கா மாற்றத்திற்குத் தயாராக உள்ளது, ஹில்லாரி தலைமையேற்கத் தயாராக உள்ளார் என்ற முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகைகள் பின்னணியில் ஜொலிக்க 15 நிமிட நேரம் பேசிய ஹில்லாரி கிளிண்டன், உலகின் மிகப் பழமையான மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் அமெரிக்கா ஆழமான பலமான உறவை ஏற்படுத்துவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று கூறினார்.
அமெரிக்காவோ அல்லது அதன் நட்பு நாடுகளோ தங்களது எரிசக்தித் தேவைக்காக அயல்நாட்டு எண்ணெய் வளத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று ஹில்லாரி கூறினார்.
அமெரிக்க இந்தியர்களுடன் ஹில்லாரி கொண்டிருக்கும் நட்புறவு குறித்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக முயற்சிக்கும் பராக் ஒபாமா கூறியிருப்பதை எந்த இடத்திலும் சுட்டிக்காட்டாத ஹில்லாரி கிளிண்டன், அமெரிக்க இந்தியர்களின் பங்களிப்பை, குறிப்பாக அமெரிக்காவின் மருத்துவத் துறையில் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது என்று கூறினார். (பி.டி.ஐ.)