இந்தோனேஷிய எரிமலைச் சாம்பல் மண்டலம் இந்தியாவையும் தாக்கலாம்
வியாழன், 28 அக்டோபர் 2010 (18:04 IST)
FILE
இந்தோனேசியாவின் கினோரியோ கிராமத்தில் வெடித்த மெராபி எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பல் மண்டலம் இந்தியப் பகுதிகளையும் தாக்கலாம் என்று ஐ.ஐ.டி. எரிமலை ஆய்வு நிபுணரும், புவிவிஞ்ஞானத் துறைப் பேராசிரியருமான டாக்டர். சந்திரசேகர்ராம் தெரிவித்துள்ளார்.
அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்லாந்தில் அபாயகரமான எரிமலை ஒன்று வெடித்ததில் ஐரோப்பிய நாடுகளிலும் அதன் சாம்பல் புகை மண்டலம் நுழைந்ததை இவர் உதாரணமாகக் காட்டியுள்ளார்.
மெராபி எரிமலை மீண்டும் கொந்தளிக்க வாய்ப்பிருப்பதாக மெராபி எரிமலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் எழும் சாம்பல் புகை மண்டலம் குறித்து வான்வழிப் போக்குவரத்துத் துறையினர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மெராபியிலிருந்து வெளிவரும் எரிமலைக் குழம்பு பற்றி அதிகம் கவலைப்படவேண்டியதில்லை, ஆனால் அதிலிருந்து மாதக்கணக்கில் வெளிவந்து கொண்டிருக்கும் டன்கள் கணக்கான சாம்பல்புகை இந்தியப் பகுதிகளையும் தாக்கலாம் என்று தற்போது சந்திரசேகர்ராம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பெரிய எரிமலை வெடிப்பு இதற்கு முன்னர் நடந்துள்ளது. வெசுவியஸ் எரிமலை வெடித்ததில் ரோம சிறுநகரங்கள் டன் கணக்கான சாம்பலில் புதையுண்டது.
வாஷிங்டனில் உள்ள செயிண்ட் ஹெலென்ஸ் எரிமலை, ஐஸ்லாந்தில் உள்ள ஹெக்லா எரிமலை பிலிப்பைன்ஸில் உள்ள பினடூபோ ஆகியவை இதுபோன்று பயங்கரமாக வெடித்து லாவாவையும் சாம்பலையும் கக்கியுள்ளதை இவர் குறிப்பிடுகிறார்.
மெராபி எரிமலை ஆய்வாளர்கள் இது பற்றிய தகவலை வெளியிடுகையில் எரிமலையின் மேற்பரப்பு வீக்கம் அக்டோபர் 20ஆம் தேதி 0.6 செ.மீ. ஆக இருந்தது அக்டோபர் 24ஆம் தேதி வெடிப்பதற்கு முன் 42 செ.மீ -ஆக அதிகரித்துள்ளது என்ற தகவலைக் கூறியுள்ளனர்.
எரிமலை வெடிப்புக்கு முன்பாக பூமிக்கு அடியில் நிலநடுக்க அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. இதனால் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என்பதும் தெரியவந்தது.
எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப சுமத்திரா பாறைப்பிளவுக்குக் கீழ் உள்ள இந்திய துணைக்கண்டத் தட்டு நழுவிக்கீழ் சென்ரது. மெராபி நில அதிர்வு குறித்த கணிப்பு சரியானதாக இருந்தால் இந்த துணைக்கண்டப்பாறை அடியில் செல்லும் செயல்பாடு ஒரு துவக்கமே என்று சந்திரசேகர்ராம் தெரிவித்துள்ளார்.
திங்களன்று தெற்கு சுமத்திராவில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் இந்தோனேசியாவிற்கு மட்டும் அச்சம் தருவதல்ல, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் அச்சம் விளைவிப்பதாகும்.
இந்தப் நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட 13 பின்னதிர்வுகளுக்குக் காரணம் நழுவும் இந்தியத் துணைக்கண்டத் தட்டு தன்னை சரிசெய்துகொள்வதின் விளைவு என்பதில் ஐயமில்லை என்கிறார் அவர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள ரீயூனியன் தீவுகளின் பிடோன் எரிமலை, சுமத்திரா மற்றும் ஜாவாத் தீவுக்கூட்டப் பகுதிகளில் உள்ள சங்கிலித் தொடர் எரிமலைச் செயல்பாடுகள், போர்ட்பிளேர் கடல்பகுதியில் உள்ள பேர்ரன் தீவு எரிமலை ஆகியவற்றால் இந்தியா சிறைபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் சந்திரசேகர்ராம்.