பூமி வெப்பமடைவதால் பருவமழை குறைவு

செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:20 IST)
பூமி வெப்பமடைவதால் இந்தியாவில் பருவமழை பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பூமி வெப்பமடைதலும், கேரளாவில் பருவ மழையும் என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் பயிலரங்கம் நடந்தது.

இதில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை முன்னாள் இயக்குநர் பி.வி. ஜோசப் பேசினார். அப்போது, அவர் பருவ மழை குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை விளக்கினார்.

அதாவது, பூமி வெப்பமடைவதால் இந்திய பெருங்கடல் பகுதியில் கடல் நீரின் வெப்ப நிலை கடந்த 50 ஆண்டுகளில் 1.5 டிகிரி அதிகரித்துள்ளது.

இது உலக சராசரியைவிட அதிகமாகும். இதனால் பூமத்திய ரேகை பகுதியில் அதிக அளவு மழை பெய்கிறது. இதன் விளைவாக இந்தியாவில் பருவ மழை குறைகிறது.

பருவ மழை காலத்தில் இந்தியாவில் வீசும் கடல் காற்றின் வேகம் கடந்த 50 ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்துள்ளது. அரபிக் கடலில் உருவாகும் புயல் சின்னங்களில் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் குறைந்துவிட்டது.

இதனால் தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்தியாவில் பெய்யும் மழையும் கணிசமாக குறைந்துள்ளது என்று ஜோசப் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்