இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்படும் 170 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான இடம். எனவே இந்தியா உடனடியாக இயற்கை பேரழிவுகளை அறியும் மையங்களை அமைக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 633 மாவட்டங்களில் 199 மாவட்டங்கள், இயற்கை பேரழிவுகள் அதிகமாக நடக்கும் சாத்தியம் இருக்கும் மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்படும் தட்ப வெப்ப மாறுதல்களால் பெரும் புயல்கள் உருவாகும் ஆபத்தும், இமய மலையை ஒட்டி பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்தும், மழைக் காலங்களில் வட மாநிலங்களல் கடும் வெள்ளம் ஏற்படும் ஆபத்தும் உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளில் பல மாநிலங்களின் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக மாறியுள்ள காரணத்தினால் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவற்றில் கடும் வெள்ளப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படுவதைப் போல, கோடைக் காலங்களில் கடுமையான வறட்சியும் நிலவுகிறது. மழை நீர் நிலத்தில் இறங்க வசதி இல்லாமல் கடலில் சென்று கலக்கும் வகையில் கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது தான் இந்த பிரச்சினைக்கு காரணம்.
1984 முதல் 2003ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைச் சேதங்களைக் கணக்கிட்டால், 85 வெள்ளப் பெருக்கும், 51 புயலும், அளவு கோலில் 5 ரிக்டருக்கும் மேலாக 10 நிலநடுக்கங்களும், 8 வறட்சியும் ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அலைகளால 10,000ம் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் கோடிக்காணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை.
2007ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் 3,339 பேர் உயிரிழந்துள்ளனர், 57 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கை குறித்துப் பேசிய உலக வங்கியின் தலைமை இயக்குநர் டாக்டர் வினோத் தாமஸ், இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது. ஆனால் பேரழிவுகளை முன்னரே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறது.
இந்தியாவின் நிதிச் செயல்பாடுகளும், திட்டமிடுதலும் பேரழிவுகளை முன்கூட்டியே கண்டறிந்து அதில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.
உலக வங்கியில் இருந்து கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 தரவரிசைக்குள் இந்தியா உள்ளது.
அதேப் போல ஆசிய நாடுகளில் அளவில் மிகப்பெரிய நாடுகளில் மிகவும் அபாயகரமான நாடாகவும் இந்தியா விளங்குகிறது.
பேரழிவு ஆபத்துப் பட்டியலில் இந்தியாவிற்கு 49.6 விழுக்காடு புள்ளிகளுடன் 36வது இடத்தில் உள்ளது.