சுற்றுப்புற சூழல் பாதிப்பு: நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
வியாழன், 12 ஜூன் 2008 (12:59 IST)
அனுமதியில்லாமல் கல் குவாரிகளையும், கனிம வளங்களையும் எடுத்து செல்வதால் சுற்றுப்புற சூழலை பாதிக்கும். இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், நீலகிரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் அனுமதியில்லாமல் கல் குவாரிகள் நடத்தப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், பல தாதுப்பொருட்கள் அடங்கிய கனிம வளங்களும் அனுமதியில்லாமல் எடுக்கப்படுகின்றன. மேலும் விதிமுறைகளை மீறி டிப்பர், ஜே.சி.பி. போன்ற கனரக வாகனங்களில் எடுத்து செல்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் வகுத்த விதிமுறையை மீறி இதுபோன்று அனுமதியில்லாமல் கல் குவாரிகளையும், கனிம வளங்களையும் எடுத்து செல்வதால் சுற்றுப்புற சூழலை பாதிக்கும். கனிம வளம் குறையும். ஆகவே, இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை முதல் முதல் அமர்வு விசாரணை செய்து ஏற்கனவே இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அனுமதியில்லாத கனிமவள குவாரிகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். எடுத்த நடவடிக்கைகள் குறித்து கனிமவளம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிம வளம் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் இந்த அறிக்கை திருப்தியாக இல்லை என்று தெரிவித்தனர்.
ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அன்றைய தினம் நீலகிரி மாவட்ட ஆட்சியரும், கனிமவள துணை இயக்குனரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.