காற்று மாசினால் பூக்கள் நறுமணம் இழக்கின்றன!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (13:01 IST)
(இன்று புவி தினம். இயற்கையின் ஆதாரமாகத் திகழும் தாவரங்கள் சுற்றுச் சூழல் மாசால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்தியம்பும் ஆய்வு இது)

காற்றில் உள்ள மாசினால் இயற்கையின் இன்றியமையாத சுழற்சி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வில், வாகனப் புகையால் பூக்கள் நறுமணத்தை இழக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

இதனால் தேனீக்கள் பாடு திண்டாட்டமாகியுள்ளது. பூக்களின் நறுமணம் அழிந்து வருவதால் பூக்களை மொய்க்கும் வண்டுகளும், தேனீக்களும் பூக்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது!

வர்ஜினியா பலகலைக் கழக பேராசிரியர் ஜோஸ் ஃபியுயென்டஸ் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதிகம் மாசில்லாத சுற்றுச்சூழலில் உள்ள பூக்களிலிருந்து வெளியாகும் மணம் 1,000 முதல் 1,200 மீட்டர்கள் வரை பயணிக்கும், ஆனால் வாகனப் புகை உள்ளிட்ட மாசு படிந்த சுற்றுச்சூழலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூக்களின் நறுமணம் 200 மீட்டர்கள் வரையே பரவுகின்றன என்று கூறுகிறார் பேராசிரியர் ஃபியுயென்டஸ்

பூக்களின் நறுமண மூலக்கூறுகள் வாகனப் புகையால் ஏற்படும் ஓஸோன், நைட்ரேட் நச்சு மாசுகளுடன் உடனடியாக கலந்து விடுகின்றன, இதனால் பூக்களின் நறுமணம் அழிந்து வருகிறது என்று பேராசிரியர் ஃபியூயென்டஸ் தலைமை ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.

பூக்களின் மகரந்தத்தை உண்டு வாழும் வண்டு உள்ளிட்ட சிறு உயிரினங்களின் உணவுக்கு இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பூக்கள் இனப்பெருக்கமும் தடைபடுகிறது.

சிறு உயிரினங்கள் இதனால் தங்களது இனப்பெருக்கத் தன்மையை இழக்கும் அபாயம் காத்திருப்பதாக இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதால் உலகின் அனைத்து உயிரினங்களும் தங்களது இயற்கை சுழற்சி முறையை இழந்து வருகிறது என்பது மட்டும் உறுதி என்று இந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.