பருவநிலை மாற்றம்: இந்தியா - சீனா முனைப்புடன் செயலாற்ற வேண்டும்!
பருவநிலை மாற்றத்தை உருவாக்கும் பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்த ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்டுள்ள இலக்குகள் போதுமானதாக இல்லையென்றும், இதனை மேற்கொள்ள தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான இந்தியாவும், சீனாவும் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆலோசகர் ராஸ் கார்னட் கூறியுள்ளார்.
புவி வெப்பமடைதல் மற்றும் வானிலை மாற்றத் தடுப்பிற்கான ஐ.நா.வின் குழு தனது இடைக்கால அறிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளது. மேலும் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்தை தடுப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயங்கரத்தை தடுப்பது இயலாத காரியமாக போய்விடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பாக உருவாகும் சீர்கேடுகளின் நிலை நாம் முன்பே எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
பருவநிலையில் மாற்றத்தை உருவாக்க கூடிய திறனைப் பெற்றுள்ள பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ள ஒப்பந்தத்தில் இருந்து இன்னும் கூடுதலாக நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், இதற்கு வளரும் நாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேன்பேராஸ் அமைப்பின் மூத்த ஆலோசகர் ராஸ் கார்னட் தெரிவித்து உள்ளார்.
மண்டல மற்றும் நாடுகள் அளவில் கார்பன் அளவைக் கட்டுப்படுத்த இரண்டு குழுக்கள் அமைக்க வேண்டும் என்று அந்த இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . வாயு மண்டலத்துக்கு வெளியேற்றப் படும் கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதில் உலகம் முழுவதும் உள்ள நாடுகளால்
எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகளை விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வரும் இந்தியாவும், சீனாவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையேயான ஐ.நா. குழு உள்ளிட்ட பல சர்வதேச குழுக்கள் அண்மைக் காலமாக தாக்கல் செய்த அறிக்கைகளில் பயன்படுத்திய புள்ளி விவரங்கள் அனைத்துமே காலாவதியானவை என்றும் கூறப்பட்டுள்ளது. பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றம், நாம் எந்த அளவுக்கு இழப்புகளை உருவாக்கும் என்று எதிர்ப்பார்த்து இருந்தோமோ அதைவிட மோசமான அளவில் உள்ளதாகவும் ராஸ் கார்னட் கூறியுள்ளார்.
கார்பனை உட்கொள்ளும் கடல் மற்றும் வாயு மண்டலத்தின் திறன் குறைந்துள்ளதாகவும், இதனால் பூமியில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடில் கணிசமான அளவு வருங்காலங்களில் வாய மண்டலத்தில் அப்படியே தங்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ள இறுதி ஆய்வுக்கு முன்பு வெப்பநிலை அளவு, கார்பன் அடர்த்தியின் தன்மை தொடர்பாக எதையும் உறுதியாக கூற இயலாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுப்பதில் மற்ற நாடுகளை விட ஆஸ்ட்ரேலியா கூடுதலாக நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். உலகின் தென் பகுதிதான் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மண்டலத்தில் உள்ள இந்தோனேஷியா, பப்பு நியு கினியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஆஸ்ட்ரேலியா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் ராஸ் கார்னட் தெரிவித்துள்ளார்.