லயோலா கல்லூரியில் தொடரும் பாலியல் தொல்லைகள்: பேராசிரியை ஜெயசாந்தி பேட்டி
வியாழன், 6 மார்ச் 2014 (20:51 IST)
சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அதை எதிர்த்து போராடியதால் தற்போது கல்லூரி நிர்வாகத்தால் வலுக்கட்டாயமாக பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியை ஜோஸ்பின் ஜெயசாந்தி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நமது வெப்துனியா நிருபரின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.
FILE
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு லயோலா கல்லூரியின் வணிகவியல் பிரிவு பேராசிரியர் (திருமணமானவர்) ஒருவரால், அதே கல்லூரியில் படித்து வணிகவியல் பிரிவில் விரிவுரையாளராக பணிபுரிந்த பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து அவர் கருத்தரித்த பின்னர் கல்லூரி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டாரே அது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
நீங்கள் கூறுவது குறித்து நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அந்த பிரச்சனை குறித்த முழு விவரம் எனக்கு தெரியாது.
ஆனால் நான் கல்லூரி நிர்வாகத்திடம் எனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் செய்த போது, கல்லூரி நிர்வாகத்தை பேராசிரியர் ராஜராஜன் மிரட்டுவது போல கூறியதாக சில தகவல்களை நான் கேள்விப்பட்டேன்.
அதில் முக்கியமானது அதே வணிகவில் துறையில் நடந்த சம்பவத்தை பேராசிரியர் ராஜராஜன் கூறி, "காமர்ஸ் டிபார்ட்மென்டில் நடந்தது போல ஜெயசாந்தியை நான் என்ன கற்பழித்து கர்பமாகவா ஆக்கி விட்டான். அந்த விவகாரத்தில் அந்த பெண்ணை வேலையை விட்டு அனுப்பினீர்கள், அதே போல ஜெயசாந்தியையும் வேலையை விட்டு அனுப்புங்கள்", என்று ராஜராஜன் கூறியதாக பலர் என்னிடம் கூறினர்.
இதில் நான் வருத்தப்படக்கூடியது என்னவென்றால் வணிகவியல் துறையில் அப்படியொரு அநீதி நிகழ்ந்த போது நானும் கல்லூரியில் பணி புரிந்தேன் என்பது தான்.
FILE
லயோலா கல்லூரியில் இது போல தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருவதாக நீங்கள் கருதுகிறீர்களா?
லயோலா கல்லூரியை இதில் நாம் முழுவதுமாக குற்றம் சொல்ல முடியாது. மோசமான கல்லூரி என்றும் சொல்லிவிட முடியாது. கல்லூரியில் பணிபுரியும் ஒரு சிலரால் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. அதை கல்லூரி நிர்வாகத்தினர் ஏன் கண்டுகொள்ளாமலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.
இந்த விவகாரத்தை இதற்கு மேல் நீங்கள் எப்படி கையாளப்போகிறீர்கள்?
இந்த விவகாரத்தை தற்போது நான் என் சொந்த, தனிமனித பிரச்சனையாக பார்க்க விரும்பவில்லை. அனைத்து மகளிருக்குமான பிரச்சனையாகவே கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளேன். இதனால் பல பெண்களின் இதுபோன்ற விவகாரங்களுக்கு நான் ஒரு வழிகாட்டியாக இருக்க நினைக்கிறேன்.
இது போன்ற இன்னலான சூழலில் எனது தாயாரும், எனது சகோதரனும் எனக்கு பேருதவியாக இருந்தனர். எனது இந்த போராட்டத்திற்கு பத்திரிக்கையாளர்களான உங்களின் உதவியையும் நான் எதிர்பார்க்கிறேன், என்று ஜெயசாந்தி கூறினார்.