இந்தியாவின் நகர்புறங்களில் வாழ்வோரில் நாளுக்கு ரூ.32க்கும் குறைவாக வருவாய் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், கிராமப்புறங்களில் நாளுக்கு ரூ.26க்கும் குறைவாக வருவாய் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் உச்ச நீதிமன்றத்திற்கு வறுமைக் கோடு குறித்து வாக்குமூலம் கொடுத்த மத்திய திட்ட ஆணையம், இன்று அந்த புள்ளி விவரம் தங்களுடையது அல்ல என்று கூறியுள்ளது!
‘தலைசிறந்த’ பொருளாதார மேதையான மாண்டெக் சிங் அலுவாலியாவை துணைத் தலைவராகக் கொண்ட (மாண்புமிகு பொருளாதார மேதை பிரதமர் மன்மோகன் சிங்கை தலைவராகக் கொண்ட) மத்திய திட்ட ஆணையத்தின் வறுமைக் கோடு தொடர்பான வருவாய் புள்ளி விவரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இருந்து நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களாலும் விமர்சனத்திற்கும், கேலிக்கும் உள்ளாக்கபட்ட நிலையில், இந்த மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியாவும், மத்திய ஊரக மேம்பாட்டு (முன்பு வனம், சுற்றுச் சூழல் துறைகளுக்கு அமைச்சராக இருந்த) அமைச்சர் ஜெய்ராம் ரமேஷூம் வறுமக் கோட்டிற்கு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குமூலம் தங்கள் துறையளித்தது அல்ல என்று மறுத்துள்ளனர்.
“வறுமையை குறைத்து மதிப்பிட்டு திட்ட ஆணையம் வாக்குமூலம் அளித்துள்ளது என்று மக்கள் எங்களை குறை கூறுகிறார்கள், அது உண்மையல்ல” என்று கூறியுள்ள மாண்டெக் சிங் அலுவாலியா, இது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பற்றிய ஆய்வு செய்த ‘பொருளாதார நிபுணர்’ சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான குழு அளித்த அறிக்கையையே தாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அளித்ததாகவும், உண்மையான வறுமைக் கோடு என்பது பற்றி, தற்போது நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டு வரும் பொருளாதார, சமூக ஆய்வுக்குப் பிறகு தாங்கள் அந்த புள்ளி விவரங்களை வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளனர்.
சுரேஷ் டெண்டுல்கர் குழு தனது அறிக்கையில் கூறியதென்ன? நமது நாட்டின் நகர்ப்புறங்களில் (2011, ஜூன் மாத மதிப்பீட்டின்படி) ஆண்டுக்கு ரூ.4,824க்கும் கீழ் வருவாய் உள்ளவர்களும், கிராமப்புறங்களில் ஆண்டுக்கு ரூ.3,905க்கும் கீழ் வருவாய் உள்ளவர்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் என்று கூறியிருந்தனர் என்று மாண்டெக் சிங் கூறியுள்ளார். அந்த அடிப்படையில்தான் தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இந்த வாக்குமூலத்தை தாக்கல் செய்ததாகவும் கூறியுள்ளார்.
நமது வினா இதுதான்: பொருளாதார மேதை சுரேஷ் டெண்டுல்கர் குழு அறிக்கை அளித்தது, சரிதான். அதன் மீது திட்ட ஆணையம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? இந்தியாவின் நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு ரூ.32 சம்பாதித்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? கிராமங்களில் வாழ ஒரு நாளைக்கு எப்படி ரூ.26 போதுமானது என்று ஏன் கேள்வி எழுப்பவில்லை?
இந்த அடிப்படையில்தான் நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 33 விழுக்காடு என்று டெண்டுல்கர் குழு அறிவித்தது. அதனை பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்த பிரதமரும், திட்ட ஆணையத்தின் துணைத் தலைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்! இவர்களுக்கெல்லாம் எது வறுமைக் கோடு என்பதெல்லாம் தெரியாது என்று நாமும் நினைப்போமானால் முட்டாளாகிவிடுவோம். நன்றாகத் தெரியும். பிறகு ஏன் பேசாமல் இருந்தார்கள்? இந்த நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டும். அதனை டெண்டுல்கர் குழு செய்துவிட்டது, ஏற்றுக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டார்கள்.
5 பேர் கொண்ட குடும்பத்திற்கு இவ்வளவு அரிசி இருந்தால் போதும், இவ்வளவு பருப்பு இருந்தால் போதும், இவ்வளவு பால் இருந்தால் போதும் என்று கிராம் கணக்கில் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டீர்களே, அதற்கென்ன பதில்?
ஒரு நாடு வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களை மேலுக்கு கொண்டு வர திட்டமிடுகிறது என்றால், அது எப்படிப்பட்ட காரணிகளை கணக்கில் கொள்ள வேண்டும் என்பது எல்லா பொருளாதார மேதைகளுக்கும் தெரிந்தே உள்ளது.
எடுத்துக்காட்டாக, ஐ.நா. அவைக்காக ‘முழுமையான வறுமை’ (absolute poverty) என்றால் என்ன என்று வரையறை செய்த பொருளாதார நிபுணர் டேவிட் கார்டன் (Indicators of Poverty & Hunger) எனும் அறிக்கையில், கீழ்க்கண்ட காரணிகளில் ஏதாவது இரண்டு இல்லையென்றாலும் அது முழுமையான வறுமையைக் குறிக்கும் என்று அளவிட்டுள்ளார்.
உணவுத் தேவை: ஒருவரின் உடல் எடைக் குறியீடு (Body Mass Index) 16க்கும் மேல் இருக்க வேண்டும் (18க்கும் மேல் இருக்க வேண்டும் என்கிறது ஐரோப்பிய நாடுகள்).
பாதுகாப்பான குடி நீர்: நதியில் இருந்தோ அல்லது குளத்தில் இருந்தோ தூய்மையான தண்ணீர் கிடைக்க வேண்டும், அது 15 நிமிடத்தில் கால் நடையாய் கொண்டுவரக் கூடியதாக இருக்க வேண்டும். கழிவறை வசதிகள்: வீட்டுக்கு அருகிலேயே கழிவறை வசதிகள் இருக்க வேண்டும்.
உடல் நலம்: உடல் நலக் குறைவு ஏற்பட்டோலோ அல்லது பிரசவ காலத்திலோ உரிய சிகிச்சை அருகில் கிடைக்க வேண்டும்.
இருப்பிடம்: வீடு என்றிருந்தால் அதில் ஒவ்வொரு அறையிலும் 4 பேர் வரைதான் இருக்க வேண்டும். வீட்டின் தரை களிமண்ணாலோ அல்லது மணலாலோ இருக்கக் கூடாது.
கல்வி: எல்லோரும் பள்ளிக்குச் சென்று படிக்கும் வசதி இருக்க வேண்டும், அல்லது படிக்கக் கற்றுக் கொள்ளும் வசதி இருக்க வேண்டும்.
தகவல்: செய்தி தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, கணினி, தொலைபேசி ஆகிய வசதிகள் வீட்டில் இருக்க வேண்டும்.
மேற்கண்ட அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, வங்கி, மருத்துவமனை, சட்டம், நிதி (வங்கிகள்), கடன் வசதிகள் ஆகியனவும் இருக்க வேண்டும் என்கிறார். இவையனைத்தும் இருக்கும் இடம் அல்லது மக்கள் பெற்றிருந்தால் மட்டுமே வறுமை இல்லை என்று பொருள் என்றும், இதில் ஏதாவது இரண்டு அவசிய வசதிகள் இல்லையென்றாலும் முழுமையான வறுமை இருக்கிறது என்று பொருள் என்றும் வரையறை செய்கிறார்.
எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பம் வாழும் வீட்டில் மண் தரை இருந்தால் அது வீட்டு வசதி அற்ற குடும்பமாக கருதப்பட வேண்டும் என்கிறார். கல்வி கற்காத மனிதர் இருந்தால் அவர் கல்வி வசதி மறுக்கப்பட்டவர் என்கிறார். செய்தித்தாள், தொலைக்காட்சி வசதி இல்லாதவர் தகவல் அறியும் வசதி மறுக்கப்பட்டவர் எனக் கூறுகிறார். மொத்தத்தில் மேற்கூறப்ட்ட அனைத்து வசதிகளையும் பெற்ற நகர வாழ் மக்கள் போல் வாழ்ந்தால் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு மேல் என்று வரையறை செய்துள்ளார்.
ஆனால் இந்த அடிப்படையில் ஏதாவது ஒன்றையாவது - நமது நாட்டின் பொருளாதார நிபுணர்கள் அடிப்படையாக்கி, வறுமைக் கோட்டை நிர்ணயிக்கிறார்களா? இல்லையே. இவர்களுக்கு ஏற்ற உலக வங்கி இருக்கிறது. அது கூறுகிறது: நாளுக்கு ஒரு குடும்பத்தின் வருவாய் ஒன்றரை அமெரிக்க டாலர் இருந்தால் போதும், வறுமைக் கோட்டிற்கு மேல் என்கிறது. அதாவது நாளுக்கு ரூ.65 இருந்தால் போதுமாம் - நகரத்திற்கு! இந்த உலக வங்கியில் பணியாற்றிவிட்டு வந்தவர்தான் நமது நாட்டின் பிரதமர்.
ஆனால், இந்த நாட்டின் பிரதமரில் இருந்து ஆட்சியாளர்கள், பெரு நிறுவனத்தினர் என்று எல்லோரும் மிகவும் விசுவாசமாக இருக்கும் அமெரிக்க நாட்டில் வறுமைக் கோட்டிற்கான அளவு கோலை என்ன தெரியுமா? இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி அமெரிக்க அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு வாரியம் (U.S. Census Bureau) வெளியிட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் ஆண்டு வருவாய் 22,350 டாலர்கள் (நமது ரூபாய் மதிப்பில் 10,73,000)!
ஆண்டுக்கு பத்தே முக்கால் இலட்சம் ரூபாய் வருவாய் உள்ளவர்கள் அந்த நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்! இந்த அளவிற்கு வருவாய் இருப்பவர்கள் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 4.36 கோடி பேர். அதாவது 15.1 விழுகாட்டு அமெரிக்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். இது 2009இல் 3.98 கோடி பேராக இருந்தது என்று கூறுகிறது யு.எஸ். சென்செஸ் வாரியம்!
இன்றைய பணவீக்க அளவில் ஒரு தனி மனிதனுக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான சத்தான உணவுடனும், அவசியமான இதர வசதிகளுடனும் வாழ எவ்வளவு தேவை என்பதை வைத்து இந்த மதிப்பு வந்திருக்கிறது அந்நாட்டு மக்கள் தொகைத் துறை. இந்த நாட்டில் சாகாமல் உயிர் வாழ கூட போதுமான உணவு தேவை கணக்கிடப்படாமல் வருவாய் கணக்கிடப்படுகிறது! நாளுக்கு 32 ரூபாயில் வாழும் நகரத்தான் மறுநாள் காலை எழுந்து என்ன உழைக்க முடியும்? இதேபோல் நாளுக்கு ரூ.26 பெரும் கிராமத்தான் - அதுவும் குடும்பமே, என்னத்தை சாப்பிட்டுவிட்டு மறுநாள் எழுந்து, அடுத்த நாள் பிழைப்பிற்கு வழி தேட முடியும்? ரூ.26 போதுமென்றால் 100 நாள் வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.100 அளிப்பதேன்?
ஆண்டுக்கு ஆண்டு நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 முதல் 10 விழுக்காடு என்று பேசியே நம்மை ஏமாற்றும் பொருளாதார நிபுணர்கள்தான் நம்மை ஆளுகிறார்கள். பணவீக்கத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் உருகுவார்கள், திடீரென்று ஒரு நாள் பணவீக்கம் அதிகரித்தும் மக்கள் வாங்குகிறார்களே, அப்படியானால் மக்களின் வருவாய் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது என்றும் கூறுவார்கள். இதே மாண்டெக் சிங் அலுவாலியாதான் பெட்ரோல் விலையேற்றம் மிகவும் நன்மை பயக்கும் என்று சமீபத்தில் கூறியவர்!
இவர்கள் கூறும் பணவீக்கம் கூட (ரூபாயின் வாங்கும் சக்தி), மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மொத்த விலைச் சந்தையில் 10 விழுக்காடு விலை ஏறினால் அது சில்லரை வர்த்தகத்தில் 20 விழுக்காடு ஏற்றி விற்கும் நாடு இது. அது தெரிந்திருந்தும் திட்ட ஆணையம் மட்டுமல்ல, இந்த நாட்டின் பொருளாதார மேதைகள் அனைவரும் சில்லரை விலை அடிப்படையில் பணவீக்கத்தை ஒரு நாள் கூட கணக்கிட்டுக் கூறியதில்லை.
இந்த பொருளாதார மகான்கள்தான் நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள், நம்புங்கள்.