லோக்பால்: காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக திட்டம்?
புதன், 22 ஜூன் 2011 (18:40 IST)
பிரதமரையும், லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2ஜி விவகாரத்தில் தங்களை கை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு லோக்பால் மசோதா விவகாரத்தை வைத்து நெருக்கடி கொடுத்து பழி தீர்க்க திமுக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
லோக்பால் மசோதா வரைவு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் தோல்வியில் முடிவடைந்தது. அண்ணா ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகள் குழு, லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையில், அதனை ஏற்க மத்திய அரசு தரப்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் குழு மறுத்துவிட்டது.
இதனால் லோக்பால் மசோதா வரைவு தொடர்பான நேற்றைய கடைசி கூட்டமும், எவ்வித உடன்பாடு இல்லாமலேயே முடிவடைந்தது.
இந்த சூழ்நிலையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று டெல்லியில் இருந்தபோதும் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுதான் கலந்துகொண்டார். கருணாநிதி அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திமுக தலைவர்கள் சிக்கலில் உள்ள நிலையில், திமுகவின் இந்தக் கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அதன் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசை ஆதரிக்கின்றன.
பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவந்தால் அது நிர்வாகத்தை பாதிக்கும் என்றும், பாதுகாப்புக்கு ஆபத்து நேரலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
ஆனால் திமுக அதற்கு எதிரான நிலையை கொண்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்ற பேச்சையும் உருவாக்கியுள்ளது.
2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை பார்ப்பதற்காக, நேற்று டெல்லி வந்த திமுக தலைவர் கருணாநிதி, சிறையில் கனிமொழியை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுததாக கூறப்படுகிறது.
கனிமொழிக்கு பிணை மனு உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கருணாநிதி மிகவும் மனம் உடைந்துபோனார்.இது விடயத்தில் காங்கிரஸ் உதவிக்கரம் நீட்டவில்லையே என்ற ஆற்றாமை அவ்ருக்குள் நிறையவே உள்ளது.
அதே சமயம் இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உறவை முறித்துக்கொண்டு வருவதைவிட, மீண்டும் பழைய திமுகவாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கோலம் பூண்டு, கூட்டணியை கலகலக்க வைக்கலாமா என்ற அளவுக்கு கருணாநிதி யோசிப்பதாகவும், அதற்கான காய் நகர்த்தலின் ஒருபகுதியாகவே நேற்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில்,லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்ற குரலை திமுக எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தமது இந்த நிலைக்கு ஆதரவாக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளை திரட்ட முடியுமா என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் திமுக தலைமை ஆராய்வதாக அறிவாலயத்திற்கு நெருக்கமான டெல்லி புள்ளிகள் கூறுகின்றனர்.
அப்படி ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியை பலவீனமாக்கிவிட்டு, அதன் பின்னர் அக்கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்ற திட்டத்தையும் திமுக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுவே பழைய திமுகவாக, அதாவது 2ஜி ஊழலில் சிக்காத திமுகவாக இருந்திருந்தால் நேற்றைய கூட்டத்தில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று டி.ஆர். பாலு பேசியதற்கே டெல்லி அரசியல் பற்றியிருக்கும்.
காங்கிரஸ் அரசை கவிழ்க்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் பா.ஜனதா அல்லது இடதுசாரி போன்ற மூன்றாவது அணி தலைவர்கள் திமுகவுடன் நெருக்கம் பாராட்ட தொடங்கி இருப்பார்கள்.ஆனால் அவர்களை திமுக பக்கம் நெருங்கவிடாமல் செய்வது 2ஜி ஊழல்தான்.
எனவே 2ஜி ஊழல் என்ற நெருப்பாற்றிலிருந்து நீந்தி கரை சேர்வதை பொறுத்தே திமுக மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும், அரசியலில் தாக்கத்தையோ அல்லது விளைவுகளையோ ஏற்படுத்தும் என்கிறார்கள் டெல்லி அரசியல் புள்ளிகள்!