ராம்தேவ் பின்னணியில் பா.ஜனதாவா?

வியாழன், 8 செப்டம்பர் 2011 (16:46 IST)
ஊழலை ஒழிப்பு மற்றும் கறுப்பு பணம் பிரச்சனையை கையிலெடுத்து மத்திய அரசுக்கு பெரும் குடைச்சலை கொடுத்துக் கொண்டிருக்கும் யோகா குரு பாபா ராம்தேவின் போராட்டத்தின் பின்னணியில், பா.ஜனதா உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ள குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை உள்ளதோ இல்லையோ, மன்மோகன் சிங் அரசுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகளை கொடுக்கும் விதத்தில் ராம்தேவை வசமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது பா.ஜனதா.

ராம்தேவுக்கு முன்னதாக லோக்பால் மசோதா விவகாரத்தை கையிலெடுத்த அண்ணா ஹசாரேவை,ஒரு வழியாக சமாளித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே மத்திய அரசுக்கு அடுத்த தலைவலியாக வந்து நின்றார் பாபா ராம்தேவ்!

மத்தியில் ஆட்சியை இழந்து ஏழு ஆண்டு காலம் ஆகிவிட்ட பா.ஜனதா, இந்த முறை மன்மோகன் சிங் தலைமையிலான அரசை ஆட்டம் காண வைத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக களமிறங்கியது.

பா.ஜனதாவின் இந்த எண்ணத்திற்கு தோதாக 2ஜி ஊழல் விவகாரம் வெடித்தாலும்,அது தற்போது உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்புக்கு உள்ளாகிவிட்டதால், அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில்தான் ஊழல் மற்றும் கறுப்பு பணம் பிரச்சனையை கிளப்பினார் ராம்தேவ்.

ஏற்கனவே அண்ணா ஹசாரே விடயத்தில் சூடுகண்ட பூனையாகிவிட்ட மத்திய அரசு, ராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்ததும் உஷாரானது.

அதனால்தான் ராம்தேவ் டெல்லியில் வந்திறங்கியதுமே கபில் சிபல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நான்குபேர்,விமான நிலையத்திற்கே நேரில் சென்று அவரை வரவேற்று, அவர் தங்கியிருக்கும் விடுதிக்கே சென்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரி நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.

ஆனால் ராம்தேவ் அசைந்து கொடுக்கவில்லை என்றதும், நள்ளிரவில் போலீஸை அனுப்பி,ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத இருந்த ராம்தேவை, தூக்கிக்கொண்டுபோய் ஹரித்வாரில் விட்டுவிட்டு, அவரது ஆதரவாளர்களையும் நைய புடைத்து அனுப்பியது.

இப்போது ராம்தேவின் சொத்து விவரங்களை தோண்டி துருவத் தொடங்கி உள்ள நிலையில், ராம்தேவே முன்வந்து தமது சொத்து விவரங்களை அறிவித்துள்ளார்.

ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ராம்தேவ் அறக்கட்டளைக்கு சொந்தமாக இருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு மலைக்க வைப்பதாக இருந்தாலும், தங்களது சொத்துக்கள் அனைத்தும் வெளிப்படையானவை;யார் வேண்டுமானாலும் சோதித்துக் கொள்ளலாம் என்று ராம்தேவ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி இன்றுடன் 6 நாள ஆகிறது , ஆகாராம் எதுவும் எடுத்துக்கொள்ளளாததால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவ்வப்போது மருத்துவர்கள் பரிசோதித்து வந்தாலும் அவரது நாடி துடிப்புமிக குறைவாக இருந்து வருகிறது.

இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவாகி வருகிறது.இந்நிலையில், ஏற்கனவே ராம்தேவின் உண்ணாவிரத போராட்டம் வலுப்பெற்றால் அது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்று உளவுத்துறை அனுப்பி உள்ள ரிப்போர்ட்டால்,போராட்டத்தை முறியடிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

அதற்கு தோதாக ராம்தேவின் ஆயுதப் பயிற்சி அறிவிப்பை வைத்து அவரை உள்ளே தள்ளலாமா என ஆலோசித்து வருகிறது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களை மனதில்கொண்டு, காவல்துறையினரிமிருந்து பாதுகாத்துக்கொள்ள இளைஞ‌ர்களு‌க்கு ஆயுத ப‌‌‌யி‌ற்‌சி வழ‌ங்க‌‌ப்போவதாக ரா‌ம்தே‌வ் அறிவித்தார்.

இந்நிலையில் அவர் ‌மீது ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றும், ரா‌ம்தே‌வ் இளைஞ‌ர்க‌ளு‌க்கு ஆயுத ப‌யி‌ற்‌சி வழ‌ங்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் ச‌ட்‌ட‌ம் வேடி‌‌க்கை பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌காது எ‌ன்றும் ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கூ‌றியிருப்பதை பார்த்தால், மத்திய அரசுக்கு பதற்றம் கூடியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

பா.ஜனதாவும் ராம்தேவ் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை பொறுத்து, அடுத்த காய் நகர்த்தலுக்கு தயாராகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்