முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா மீதான 2ஜி ஊழல் குற்றச்சாற்றால், திமுகவே ஆட்டம் கண்டுள்ள நிலையில், ராசாவின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்வியுடன் கடந்த கால நிகழ்வுகளை திரும்பி பார்த்தால், அப்படி ஒன்றும் அவரது நிலை மோசமாகாது என்றே தெரிகிறது.
தமிழகத்தில் ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளான் பல முன்னாள் அமைச்சர்கள், அரசிய தலைவர்கள் மட்டுமல்லாது, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்த அரசியல் புள்ளிகள் கூட, அதே கட்சியிலோ அல்லது மாற்று கட்சியிலோ கன ஜோராக வலம் வந்து கொண்டிருப்பதை காணலாம்.
இதற்கு கடந்த கால உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.
1991-96 ஆம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் அங்கம் வகித்த பல முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது பின்னர் வந்த திமுக ஆட்சியில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கென்றே பல தனி நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன. வழக்கு விசாரணைகளின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றோ அல்லது குற்றச்சாற்றை நிரூபிக்க தவறிவிட்டதாகவோ கூறி குற்றச்சாற்றுக்கு ஆளான பலரும் விடுவிக்கப்பட்டனர்.
அதே சமயம் ஒரு சிலர் மீதான குற்றச்சாற்றுக்கள் நிரூபிக்கப்பட்டு, சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.ஆனால் அப்படி சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் கூட இன்று தங்களது மாவட்டத்தில் சக்திமிக்க அரசியல் தலைவராகவும்,மாநில அளவில் முக்கிய அரசியல் புள்ளியாகவும் அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர்.
முன்னாள் அதிமுக அமைச்சரான டி.எம். செல்வகணபதியை எடுத்துக்கொண்டால், அவர் இன்று திமுகவில் சேர்ந்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும், சேலத்தில் முக்கிய திமுக தலைவராகவும் உள்ளார்.
சேலம் திமுகவில் வீரபாண்டி ஆறுமுகம் ஒரு வலுவான சக்தியாகவும், சமயங்களில் திமுக தலைமயையே மிரட்டி பார்க்கிற அளவிற்கும் வளர்ந்து நிற்பதால், அவருக்கு "செக்" வைப்பதற்கென்றே அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டு கிடந்த செல்வகணபதியை திமுக வளைத்து போட்டதாக ஒரு பேச்சு உண்டு.
இதில் வேடிக்கை என்னவென்றால், செல்வகணபதி மீது ஊழல் வழக்கு தொடர்ந்து அவரை சிறையில் தள்ளியது திமுக அரசுதான்.
அதே கதைதான் முன்னாள் அதிமுக அமைச்சர் வி.சத்யமூர்த்தி விடயத்திலும்! அதிமுக தலைமையால் கண்டுகொள்ளப்படாமல் கிடந்த இவரை, திமுக தங்கள் பக்கம் தூக்கிக்கொண்டு வந்துவிட்டது. இன்று அவர் ராமநாதபுர திமுகவில் ஒரு வலுவான சக்தியாக உள்ளார்.
அதே சமயம் மேற்கூறிய இருவரைப் போன்றே திமுக அரசால் ஊழல் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தின் நெடிய படிகட்டுகளில் ஏறி இறங்கிய கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் இன்றைய நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக திகழ்கிறார்.
ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளானதால், செங்கோட்டையனை அதிமுக ஓரம் கட்டிவிடவோ அல்லது ஒதுக்கி வைத்துவிடவோ இல்லை.
அதேப்போன்று முன்னாள் அதிமுக அமைச்சரான எஸ்.கண்ணப்பன்- தற்போது ராஜகண்ணப்பன்- நிலக்கரி இறக்குமதி ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளானார்.ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமியால் தொடரப்பட்ட இந்த வழக்கும், கடைசியில் புஸ்வாணமாகி போய்விட்டது. அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார் கண்ணப்பன்.
அதே சமயம் அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு வளமான துறைகளுக்கு அமைச்சராக இருந்த கண்ணப்பன், 1996 தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததும் அக்கட்சியிலிருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கி நடத்தி வந்தார்.
கடைசியில் கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, அவரை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொண்டது. அத்தேர்தலில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோவியைத் தழுவினார்.ஆனாலும் இன்று சிவகங்கை அதிமுகவில் ராஜகண்ணப்பன் ஒரு முக்கிய சக்தியாக திகழ்கிறார்.
மற்றொரு முன்னாள் அதிமுக அமைச்சரான இந்திரா குமாரி, இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக, சேலை கொள்முதல் செய்ததில் ஊழல் புரிந்ததாக குற்றச்சாற்றுக்கு ஆளாகி நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்தார்.கடைசியில் அவரும் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.இன்று தமக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர்ந்த திமுகவிலேயே ஐக்கியமாகிவிட்டார்.
இவர்களெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய தலைவர்களே ஊழல் வழக்குகளுக்கு ஆளானவர்கள்தான்.
ஜெயலலிதாவை எடுத்துக்கொண்டால், 1996 ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு எதிராக டான்சி நில வழக்கு, வண்ணத்தொலைக்காட்சி ஊழல் வழக்கும், கொடைக்கானல் ப்ளசண்டே ஓட்டல் ஊழல் வழக்கு, பிறந்த நாள் பரிசாக வெளிநாட்டிலிருந்து பரிசு பெற்ற வழக்கு என பல வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால் 2001 ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வழக்குகளெல்லாம் மாயமாகின.அவர் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிட்டார்.
இதில் பிறந்த நாள் பரிசு வழக்கு மட்டும், பெங்களூரூ நீதிமன்றத்தில் இன்றளவும் நடந்துகொண்டுதான் உள்ளது.இது ஒன்றுதான் ஜெயலலிதாவை இன்றளவும் அச்சுறுத்திக்கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும், கட்சியிலோ அல்லது மக்களிடத்திலோ அவருக்குள்ள செல்வாக்கு குறைந்ததாக தெரியவில்லை.
அதுமட்டுமல்லாது அவருடன் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிற அல்லது கூட்டணி வைக்க முயற்சித்து வருகிற அரசியல் கட்சிகள்,ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
அதேமாதிரிதான் கருணாநிதி விடயமும்!2001 ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மேம்பால ஊழல் வழக்குக்காக கருணாநிதியும்,அவரது மகன் மு.க. ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார்கள்.
2006 ல் திமுக ஆட்சிக்கு வந்ததும்,முன்பு முன்பு சர்க்காரியா ஊழல் காணாமல் போனதுபோன்று, அந்த வழக்குகள் காணாமல் போயின.இன்று கருணாநிதி முதல்வர்; மு.க. ஸ்டாலின் துணை முதல்வர்.
இதில் ஒரு சில பழிவாங்கும் நோக்கில் போடப்பட்டாலும்,அரசியல்வாதிகள் மீது தொடரப்படும் பெரும்பான்மையான ஊழல் வழக்குகள்,இறுதியில் இந்த கதியைத்தான் எட்டுகிறது.
கீழ் நீதிமன்றங்கள் ஊழல் வழக்கில் இவர்களை தண்டித்தாலும்,சட்டத்தில் இருக்கிற சந்துபொந்துகளை திறமையான வழக்கறிஞர்களின் வாதத்தை வைத்து உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ விடுதலை பெற்றுவிடுகிறார்கள்.
போதாதற்கு ஆட்சியில் இருந்தாலும் சரி; இல்லாவிட்டாலும் சரி;இவர்களை கை தூக்கி ஆதரிப்பதற்கென்றே அரசியல் கட்சிகளும் தயாராக உள்ளன.மக்களுக்கும் மாற்று வேட்பாளர்களுக்கான வாய்ப்பு இல்லாததால்," எரிவதில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?" என்று பார்த்து இவர்களைத்தான் மாறி மாறி தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை.
ஆக மொத்தத்தில் சட்டமும், தண்டனையும் மேல்முறையீட்டிற்கு போக வழியில்லாத சாமான்யர்களுக்கும், எங்கோ ஒரு மூலையில் நூறுக்கும், ஐந்நூறுக்கும் கை நீட்டுகிற ( அதுவும் தவறுதான்) கடைநிலை அரசு ஊழியர்களுக்கும்தான் போல.
கோடிகளில் சுருட்டுகிற அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கிடையாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிற நிலையில், ராசா விடயத்தில் மட்டும் அது மாறிவிடவாப் போகிறது?